புதன், 27 ஜூன், 2018

இங்கு அமரர் சிறப்புக் கண்டார்


உலகில் பிறக்கும் எல்லார்க்கும் வாழ்க்கையுண்டு; ஆனால் எல்லார்க்கும் வரலாறு இருப்பதில்லை. வரலாற்றுப் பேரேட்டில் தம் பெயரை பொறித்துக் கொள்ளுமாறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களை காலம் மறந்ததில்லை. நினைவுகள் இனிமை நிறைந்த பூஞ்சோலையாய் சில நேரம் துன்பம் மிகுந்த நெருஞ்சி முட்களாய் சிலபோது மனிதனைப் பிணித்திருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் ஏதோவொரு நினைவுகளோடுதான் சுமந்தலைகிறான். இந்த மண்ணில் அலைந்து திரியும் ஒவ்வொரு மனிதனினும் மூளைக்குள்ளும் நினைவுகள் என்றும் தீர்வதேயில்லை. காலமும் நொடிக்கு நொடி மரித்துவிட்டாலும்கூட நினைவுகள் அதை வெவ்வேறு வகையில் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனின் நெஞ்சக்கூட்டுக்குள்ளும் நினைவுகள் புகுந்து தனக்கான காலத்தை உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன. சிலசமயம் மறதி என்ற பேரில் சற்று ஓய்வும் விபத்து என்ற நிலையில் சற்று விடுபடுதலும் மரணம் என்ற பெயரில் நிரந்தரமாகவும் நினைவுகள் மனிதருக்கு இல்லாமல் போகலாம். ஆனால் என் வாழ்வின் இறுதி நொடிவரை ஐயாவின் நினைவிருக்கும் என்பது மட்டும் உறுதி.  ஐயா குழ. செயசீலனாரைச் சந்தித்த நாள்தொட்டு எழும் நினைவுகள் ஒவ்வொன்றும் காணொலிக் காட்சிபோல் நினைவில் நிழலாடி உதிர்ந்து கொண்டே இருந்தன. தமிழ் வாழப் பணியாற்று தமிழல்லவோ நம் உயிர்க்காற்று என்ற கொள்கை நெறியோடு தம் ஊனையும் உயிரையும் தமிழ்ப்பணியில் கரைத்தவர் ஐயா. பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களே ஐயா குழ.செயசீலனார் தமிழ்ப்பால் கொண்ட காதலைக் கண்டு வியந்து அவரின் பெயரைத் தனித்தமிழில் வெற்றிநெறியன் என அழைத்ததாக அன்புப்பொங்க குறிப்பிட்டது இப்போது என் காதோரம் ஒலிக்கிறது. ஐயா குழ.செயசீலனார் அவர்கள் தமது தனிவாழ்விலும் சமூக வாழ்விலும் தமிழையே உயிர் மூச்சாக்கி தளராத கொள்கைப் பிடிப்போடு எத்தனையோ சோதனைகளும் வேதனைகளும் இடைவிடாமல் குறுக்கிட்ட போதும் கிஞ்சிற்றும் மனம் தளராமல்  தமிழைத் தன்னுள்ளும் புறமும் தவமாக்கி தழைக்கப் பாடுபட்டுவந்த பெருந்தகையாளர். தமது ஒவ்வொரு செயலிலும் யார் கைவிட்டாலும் என் தாய்தமிழச்சிஒருபோதும் கைவிடமாட்டாள் என்று தமிழ்மொழியின்பால் கொண்ட நிகரற்ற அன்பையும் நம்பிக்கையியும் எப்போதும் உறுதியோடு அவர் கூறும்போது கேட்கும் நமக்கே மெய்சிலிர்த்துவிடும். உலகத்தைப் பற்றிய உயரிய பரந்துபட்ட பார்வையையும் வானளாவிய விழுமியச் சிந்தனைகளையும் என்னில் கருக்கொள்ள முழுமுதற் காரணமாக விளங்குபவர் இவரே. என்னைப் போன்ற பலரின் அறிவின்மீது படிந்திருக்கும் புழுதியை அன்போடு தூசுதட்டி சாணை தீட்டிய பெருமைக்குரியவர். பலரின் இதயங்களில் வெளிச்சத்தைப் பூசி இருளைத் துரத்தியவர். இந்த நெடிய வாழ்வுப் பாதையில்  நீர்ச்சுனைகள்போல பலரும் இளைப்பாறும் ஆலமரமாய் விளங்கியவர். கைத்தேர்ந்த ஆசிரியராக திறந்த உற்சாகமான உள்ளன்போடு மாணவர்களுக்கு கட்டற்ற  முழுநம்பிக்கையுடன் இந்த உலகை அணுக்கமாகக் காட்டியவர். இவ்வுலகின் மகிழ்ச்சி, துள்ளல், துடிப்பு போன்ற ஒளியையும் துன்பம், வன்மம், தோல்வி போன்ற இருண்ட பகுதிகளையும் பக்குவமாய் காட்டியவர். உழைப்பைக் கொடுப்பதில் எவ்வகையிலும் கணக்கு வைக்காத உத்தமர். அவர் கருணையோடு சொல்லித்தந்த பாடத்தைத்தான் மூலதனமாகக் கொண்டு இதுவரை பலர் ஆசிரியராக வாழ்கின்றனர்.  அறியாமை இருட்டில் இருப்பவர்க்கு அறிவுச் சுடரை ஏற்றி வைப்பதில் இவர்க்கு நிகர் வேறு எவரையும் நான் இதுவரை கண்டதில்லை. அவரின் பேச்சிலும் எழுத்திலும் புதிது புதிதான சொல் நேர்த்தி, கற்பனைகள் உருண்டோடும், அடுக்கடுக்காக அழகழகாகப் பூக்கும் சொற்களாக அவர் திருவாய் மலரும் வார்த்தைகள் கேட்போரை தமிழ்ப்பால் பிணைக்கும், சிலபோது பொங்குக் கடலாகப் புறப்படும் சொற்கள் செந்தமிழின் செழுமையைப் பறைச்சாற்றும். நாம் தமிழர், அதிலும் ஆசிரியர், நாம் திருத்தமாகவும் அழகாகவும் இனிமையுடன் முன்மாதிரியாகவும் பேசாவிடில் வேறு யார்தான் பேசுவது?’ என்று சொல்வதோடு நின்றிடாமல் பணியிடத்திலும் நட்பு வட்டாரத்திலும் எங்கும் கூடுமானவரை செந்தமிழையே பயன்படுத்துவார். முப்பத்து நான்கு ஆண்டுகளுக்குமுன் அவரோடு பணி செய்த காலம் தொடங்கி ஐயாவின் எத்தனையோ தனித்தச் சிறப்புகளை உள்வாங்கி என் வாழ்விலும் கடைப்பிடித்து ஏற்றம் கண்டிருக்கின்றேன். எந்தச் சூழலிலும் பேச்சிலும் எழுத்திலும் தமிழின் தூய்மையை நாம் பேண வேண்டும் என்பதில் ஐயாவின் உறுதிபாட்டை இயன்றளவு கற்றல் கற்பித்தலுக்கு வெளியேயும் வாழ்வியல் அறமாகப் பின்பற்றி வருகின்றேன். பணிக்காலத்தில் எப்போதும் வெளிர்நிறத்தில் அவர் மேற்சட்டையும் கறுப்பு நிற காற்சட்டையும் நேர்த்தியாக அணிவதை முன்மாதிரியாகப் பின்பற்றி இதுவரை நானும் ஆசிரியர் தொழிலுக்கேற்ற வண்ணமாக உடை அணிந்து வந்திருக்கின்றேன். அவரையே வழித்தடமாகக் கொண்டு இன்றுவரை இயன்றவரை இந்த ஆசிரியமெனும் இறைவழிபாட்டில் பயணித்து வருகின்றேன். தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் - இங்கு அமரர் சிறப்புக் கண்டார்எனும் பாரதியின் திருவாக்கை வாழ்வியல் இலக்கணமாகக் கொண்டு இதுவரை வாழ்ந்து காட்டிய பெருந்தகையை இழந்தது தமிழுலகுக்கு மட்டுமல்ல ஆசிரியர் உலகுக்கும் பேரிழப்புதானே?

கருத்துகள் இல்லை: