திங்கள், 15 ஜூலை, 2019

தன்னை உணரச் செய்யத்தானே கல்வி?


“உண்மையிலேயே கல்வி என்றால் என்ன? அது எப்படிப்பட்டதாக இருந்தால் நல்லது?” என்னை அன்னொருநாள் மரியாதை நிமித்தமாகச் சந்திக்க வந்த அந்த இளம் ஆசிரியர்களிடம் வினவினேன். “மீண்டும் கேள்வியா?” என இருவரும் ஒருவரையொருவர் புன்னகைத்தபடி பார்த்தனர். நான் தீர்க்கமாகப் பதில் எதிர்பார்ப்பதை உணர்ந்து ஒருவர் “கல்வி அறிவை வளர்க்க வேண்டும். அது மகிழ்ச்சியைத் தரவேண்டும்” பதைபதைப்பாகக் கூறினார். “சந்தேகமாகக் கூறினாலும் உங்கள் பதில் சரிதான்” என்றதும் தமது கட்டை பெருவிரலை உயர்த்தி நண்பரிடம் காட்டிச் சிரித்தார் சொன்னவர். சில வினாடிகளுக்குப் பிறகு “சரிதான் ஆனால் மிகச் சரியானதைச் சிந்திப்போமா?” என்றதும் கவனமாகக் கேட்டனர். “சராசரி மக்களை அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தயார் செய்யாத கல்வி, ஒழுக்க வலிமையைத் தராத கல்வி, பிறர் நலம் நாடுகின்ற உணர்வைத் தராத கல்வி, சிங்கம் போன்று வீரம் துணிவைக் கொடுக்காத கல்வியை உண்மையான கல்வி என்று சொல்ல முடியுமா? ஒருவனைத் தன் சொந்தக் கால்களிலே நிற்கும்படிச் செய்வதே உண்மையான கல்வி” என் மேசையின் இழுவறையில் வைத்திருந்த விவேகானந்தரின் வாசகம் ஒன்றை அவர்களிடம் காட்டியபடி அமைதியாக வாசித்துக் காட்டினேன். “நம் வகுப்பில் இருக்கும் பலதரப்பட்ட மாணவர் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கும். கல்வியானது அம்மாணவனின் தனித்துவத்தையும் அடையாளம் காட்டுவதாக அமைய வேண்டும். இதற்கு பொருத்தமாகக் கற்பனைக் கதை ஒன்று சொல்லட்டுமா?” நான் சொல்வதை தலையாட்டி ஆமோதித்தனர். “ஒரு காட்டில் ஒன்றாக சேர்ந்து வாழும்  நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன என அனைத்து விலங்குகள் பரந்துபட்ட கல்வித் திட்டம் கொண்ட பள்ளிக்கூடம் ஒன்றை நடத்த விரும்பின. அதனால் அந்தப் பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் பறத்தல், மரமேறுதல், நீந்துதல், தோண்டுதல் என அனைத்தையும் சேர்ப்பதென முடிவெடுக்கப்பட்டது. பறவைகள் சிறப்பாகப் பறந்தன ஆனால் ஓடுவதில் தோற்றுப் போயின. ஓடுவதில் வேகமான மான்கள் பறக்க முயன்று கீழே விழுந்து காலொடித்துக் கொண்டன. மரத்தில் விறுவிறுவென ஏறத் தெரிந்த அணில்கள் நீந்தத் தெரியாமல் தவித்தன. நீந்தத் தெரிந்த மீன்களோ வேறெந்த பயிற்சியிலும் கலந்து கொள்ள முடியாமல் கலங்கின. காட்டு நரிகளோ, “ஊளையிடும் போட்டி பாடத்திட்டத்தில்  சேர்க்காததால் பள்ளியிலிருந்து வெளியேறுவதாக வம்படித்தன.  ஏதோ கொஞ்சம் அரைகுறையாகாக் கற்றுத் தேர்ந்த ஓணான் மட்டும் எல்லாப் பாடங்களிலும் சராசரி மதிப்பெண் பெற்றது.” இப்படி நான் சொல்லி முடித்ததைக் கேட்டு சிரித்த ஆசிரியர்கள் என் கதையின் சாரத்தைப் புரிந்து கொண்டனர்.   பின்பு எங்கள் உரையாடல் சிறிதுநேரம்  அதையொட்டி வளர்ந்தது. “அப்போதெல்லாம் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு மாணவனுக்குள்ளே என்னனென்ன திறமை மறைந்திருக்குன்னு பளிச்சின்னு தெரியும். அதுக்கு ஏற்ப அவரவர் திறமைகளை முடுக்கி விடுவாங்க.” தம் அனுபவத்தை ஒருவர்  பகிர மற்றவரோ அன்று ஆசிரியர்கள் மாணவர்களை நன்கு அறிந்தவர்களாக இருந்தார்கள். ஒருநாள் பள்ளிக்கு வரவில்லை என்றாலும் அடுத்த நாளே ஆசிரியர் வீட்டுக்குத் தேடி வந்துவிடுவார்; அக்கறையோடு நலம் விசாரிப்பார்” என ஆமோதித்தார். “ம்ம்ம்.. அப்படிப்பட்ட உணர்வும் உறவும் இன்று ஆசிரியர்களிடம் ஏன் தொலைந்து போனது?” கேள்வியை அவர்கள் முன் வைத்தேன். அவர்கள் புறப்படுமுன் நான் மீண்டும் தொடக்கத்தில் கேட்ட கேள்வியை முன் வைத்தபோது “மாணவன் தம் சுயத்தை தாமே அறியச் செய்து மலர வைப்பதே உண்மையான கல்வி” என்று அவர்கள் புரிந்து சொன்னது என்னுள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தன்னை உணரச்  செய்யத்தானே கல்வி?

கருத்துகள் இல்லை: