புதன், 27 ஜூன், 2018

என்றும் அணையாத தமிழ்த் தீபம்
நேற்று இரவு பதினொரு சரியாக பத்து ஐம்பது மணியளவில் இடியைப் போன்ற அந்த இறப்புச் செய்தி என் இதயத்தைப் பிளந்தது. என் வாழ்வுக்கு மிக நெருக்கமான மாமனிதர் ஐயா குழ.செயசீலனாரின் காலத்தோடு கலந்திட்டார் என்ற  பிரிவுச் செய்தி என் இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது. கண்டது தமிழ்; கேட்டது தமிழ்; உண்டது தமிழ், உயிர்ப்பது தமிழ், கொண்டது தமிழ், கொடுப்பது தமிழ், விண்டது தமிழ், விளங்குவது தமிழ் என்று தமிழே என்பாகவும் தசையாகவும் உலவிய ஐயா குழ.செயசீலனார் மறைந்த செய்தியை மனது ஏற்க மறுத்தது. பத்துப் பதினைந்து நிமிடங்கள் செயலற்று அவரின் நினைவுகளில் அமிழ்ந்து போனேன். இதுவரை அவரோடு வாழ்ந்த காலத்தைத் தனியாகப் பிரித்தெடுத்து நெஞ்சில் உதறும்போது சிதறும் நினைவுகள் கண்களைக் குளமாக்கின. ஒவ்வொருமுறை சந்திப்பின்போதும் தந்தையும் களிகூர ஆரத்தழுவிக்கொள்ளும்போது அவரிடத்தில் தாயின் அன்பையும் அறவுரைகளைச் சொல்லும்போது உடன் பிறந்த சகோதரராய் பாசத்தையும் மெய்யாக உணர்ந்துள்ளேன். நினைந்து நினைத்து நெகிழ்ந்து நெகிழ்ந்து உணர்ந்து உணர்ந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அவரோடு பழகிய காலங்கள் எல்லாம் என் முன்னே நிழலாடின. தொலைவில் காணும் போதே ஒரு புன்னகை பூத்த முகம். நெடிய உருவம்; நாவலர் நடை அருகில் கண்டால் கலகலவெனக் குழந்தைச் சிரிப்பு. தகதகவென ஒளி உமிழும் பாரதியின் பார்வை. தமிழ்த் தென்றலை நினைவுகூரும் மொழி. பாவாணரின் தனித்தமிழ்; அண்ணாவின் ஆற்றொழுக்கான நடை; கலைஞரின் ஊற்றுப் பெருக்கெடுக்கும் சொல்வளம்; செந்தமிழ்ச் செல்வரின் சந்தத் தமிழ் இவை அனைத்தும் ஒருங்கிணைந்த இன்பத் தமிழாக என்றென்றும் விளங்கியவர் ஐயா குழ.செயசீலனார். இனிமை தவழ் தமிழுணர்வால் இயங்கிவரும் தூயர்; ஈதலரம் புரப்பதிலே எழில்சொரியும் அன்பர்; கனிமைமிகும் உள்ளமதால் இனிமை தரும் நல்லர்; கற்றோரைப் பேணுவதில், கவின்மையுறும் நெஞ்சர்; சீலம் நிறைந்த செம்மல்; செயல் திறனில் வல்லவர்; பொறுப்பை உணர்ந்தவர்; நம்பிக்கைக்கு உரியவர்; செயற்கரிய செயலையும், வியத்தகு முறையில் நிறைவுறச் செய்து இசை பெற வாழ்ந்த பெருந்தகை. தமிழ் மொழியின்பால் தணியாத காதல் கொண்டவர். இயல்பாகவே ஒருவர் தாய்மொழி மீதும், சொந்தப் பண்பாட்டின் மீதும் இருக்கக்கூடிய பற்றையும் பாசத்தையும்விட இவரிடம் கூடுதலாகவே நான் கண்டதுண்டு. தம் மூச்சுப் பேச்சு உணர்வெல்லாம் தமிழாகவே சிந்தித்தவர். தமிழுக்கு எங்கெல்லாம் ஏற்றம் செய்யுமோ அதையெல்லாம் ஒரு கடுகளவும் விடாமல் செய்தவர். தமிழ் உயர்ந்தால் தமிழன் உயர்வான் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். தமிழன் மட்டும் தன்னை உணர்ந்துவிட்டால் தம் மொழியின் தொன்மையை அறிந்துவிட்டால் அவன் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது என்ற உயர்வெண்ணம் கொண்டவர். தமிழன் மட்டும் தம் வரலாற்றையும் இலக்கியப் பெருமையையும் இலக்கணச் சிறப்பையும் பண்பாட்டு விழுமியங்களையும் புரிந்துகொண்டால் அவனை வெல்வதற்கு உலகில் வேறு யாராலும் முடியாது என்று நம்பிக்கை ஊட்டுவார். உலகத்துக்கே மொழியாலும் நாகரிகத்தாலும் பண்பாட்டுச் செழுமையாலும் வளம் சேர்த்த தமிழினம் இன்று இப்படி நலிவுற்றுக் கிடக்கிறதே என்று கவலை கொள்வார். மிகப் பெரிய நாகரிகமும் சிந்தனையும் கொண்ட தமிழினம் அறியாமையால் இப்படி சுருண்டு கிடக்கிறதே என்று சிலவேளைகளில் என்னிடம் உள்ளூர வருத்தம் கொள்வார். எது எப்படியாயினும் தமிழால் முடியும் என்ற நம்பிக்கையை அவர் என்றும் கைவிட்டதே இல்லை. தமது எல்லாச் செயல்களிலும் தமிழையே தம் உற்றத் துணையாக அழைத்துக் கொள்வார். எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்களவு தமிழை எல்லாத் தளங்களிலும் உயிர்ப்புடன் ஒளிர்வதை உறுதி செய்து கொள்வார். தமிழ் எல்லா இடங்களிலும் நீக்கமற வாழ்வதற்கு தம்மால் இயன்ற அனைத்து பணிகளையும் காலமும் பயனும் கருதாது செய்வதில் வல்லவர். பாரதியையும் தேவநேயப் பாவாணரையும் உளமார நேசித்து அவர்களைப் போல ஆக்கப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். அவரோடு பணிபுரிந்த பலரைப்போல நானும் அவரின் தமிழுணர்வையும் சிந்தனையையும் கண்டு மெய்சிலிர்த்துள்ளேன். தனித்தமிழை நாளும் உச்சரிப்பதிலும் பிறருக்குப் பரவலாக்கம் செய்வதிலும் நிகரில்லா அவரின் முனைப்பும் உழைப்பும் ஈடிணையற்றது. பல்லாண்டுகள் தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றிய அருந்தமிழ்ப் புலவர்’, ஆசிரிய மணி’, தனித்தமிழ் மழவர் தமிழ்த்திரு குழ.செயசீலனார் மலேசியக் கல்வி உலகில் மிகவும் பண்டட்ட நல்லாசிரியராக ஒளிவீசித் திகழ்ந்தவர். அன்னார் கருணையில் ஊறிய இதயமும், அறிவில் வானச் செறிவும், அன்பில் மழையின் பயனும், அணைப்பில் தாயின் இனிமையும், நெறியில் தந்தையின் உறுதியும், என்றும் இனிய மொழியும், இதம் தரு செயலும், கனிவு நிறை நெஞ்சமும், கவினுறு தோற்றப் பொலிவும் கொண்டு வைரம்போல் ஒளி வீசித் திகழ்ந்தவர். நூலறிவும் நுண்ணறிவும் நிரம்ப பெற்ற இவர் அருந்தமிழிலும் ஆங்கிலத்திலும் கடல்மடை திறந்தாற் போன்ற பேச்சாலும் எழுத்தாலும் வல்லவர்; தமிழ்த் தொண்டில் தன்னிகர் அற்றவர். ஆசிரியம் என்பது தொழிலன்று, அஃது ஓர் இறைவழிபாடு என்று நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டிய அருங்குண ஆசிரியர்; தனித்தமிழ் வாணர். வாழ்நாளில் ஒவ்வொரு மனிதனும் இறப்பு என்கிற தவிர்க்க முடியாத ஒன்றிற்குச் சமாதானம் சொல்லத் தெரியாமல் தவிக்கின்றான். ஆனாலும் உயிரின் இயல்பறிந்து காலம் அவனை மெல்ல ஆற்றுப்படுத்தும் மருந்து தந்து ஊக்கப்படுத்தி அடுத்த நகர்வுக்குத் தயார்ப்படுத்திவிடுகிறது. ஐயாவின் பிரிவால் துயருறும் எங்களை ஆற்றுப்படுத்துவதற்கு காலத்திடம் மண்டியிடுவதைத் தவிர வேறு வழியில்லை. குழ.செயசீலனார் என்கிற தமிழ்த் தீபம் அணையவில்லை மரணத்தால் அணைக்கவும் இயலாது. தமிழை நேசிக்கும் நெஞ்சங்களில் அன்னார் ஏற்றி வைத்த ஒளிவிளக்கு தித்திக்கும் இலக்கணமாக இலக்கியமாக தனித்தமிழாக என்றும் சுடர்விட்டு எரிந்துகொண்டிருக்கும். காலமே உன் நெஞ்சில் கருணையே இல்லையா?
கருத்துகள் இல்லை: