வெள்ளி, 7 மே, 2010

தாயெனும் தேவதை...

தாய்மையென்பது கொண்டாடப்படுவதற்கு மட்டுமல்ல தினம் துதிக்கப்படுவதற்கும் அன்பால் தொழப்படுவதற்கும் என்பது நமது தமிழினத்தின் பாரம்பரிய பேருண்மை. ‘அம்மா’ என்ற சொல் உலக மொழியனைத்திற்கும் சொந்தமென்றாலும் தமிழில் மட்டும் அதன் பொருளடர்த்திக்கு வேறெதுவும் ஈடிணையாகாது. ‘அம்மா’ என்ற சொல்லில் ‘அ’ உயிரெழுத்து, ‘ம்’ மெய்யெழுத்து, ‘மா’ உயிர்மெய்யெழுத்து. ஆக அம்மா உயிரும், மெய்யும், உயிர்மெய்யும் சேர்ந்த தெய்விகம்.

‘வானம் எனது தந்தை - பூமி நமது அன்னை, உலகம் நமது வீடு – உயிர்கள் நமது உறவு’ எனும் கள்ளங் கபடமற்ற பாமர மனித அடியாளத்திலிருந்து முளைவிட்டவன் நான். எனக்குள் அடையாளம் காணப்பட்ட தாய் மனித உருவிலிருந்து கிளைவிட்டு என் பரந்த வாழ்வின் அனைத்து வெளிகளிலும் நீக்கமற நிறைந்து என்னை வாழ்விக்கிறாள். என்னை ஈன்ற தாயை எல்லா கால வெளிகளுக்கும் அப்பால் தரிசிக்கக் கற்று தந்த என் முன்னோர்களை சிலாகிக்கிறேன்.

‘மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்’ எனும் உலகநீதியாரின் தாயன்பு ததும்பும் வார்த்தைகள் என்னுள் ஆழ வேரூன்றப்பட்டுள்ளது. நிலமகளின் பரந்த மடியினிலும், தென்றலின் சுகமான தீண்டுதலிலும், சலசலத்தோடும் நதியின் பூஞ்சிரிப்பிலும், அன்றலரும் மலர்களின் மலர்ச்சியிலும், வண்டுகளின் இன்ப மீட்டுதலிலும், நிலவின் பாலூட்டும் தாலாட்டிலுமென பலவண்ண வடிவங்களிலிருந்தும் விரிந்து ஒரு கட்டமைப்புக்குள் கட்டுவிக்க முடியா தெய்வமே தாய்.

‘தாயின் காலடியிலேயே சொர்க்கம்’ இருக்கிறது என்றுரைத்த நபிகளின் உட்பொருளை நம்மில் பலர் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அன்னையர் நாளுக்கு பரிசும் பொருளும் தந்து கொண்டாட்டி ஒரு சடங்கை நிறைவேற்றும் மனோபாவமாகவே எனக்குத் தெரிகிறது. இறைவன் எல்லா இடங்களிலும் தாயின் வடிவத்தில் நிறைந்திருக்கிறான் எனும்போது கொண்டாட்டத்தைக் கடந்து உணர்வால் துதிக்கப்பட வேண்டிய தெய்விக உறவல்லவா?

முந்தி தவங்கிடந்து முன்னூறு நாள் சுமந்து தொந்தி சரிய ஈன்றெடுத்த அன்னைக்காக ஊனுருகிய பட்டினத்தாரும் அவர் போன்ற முற்றும் துறந்த ஞானியர் பலரும் என்றுமே துறக்க முடியாத திருவுறவு தாய். உயிர் இறை தந்த பிச்சையானாலும் உடல் தாய்தந்தை தந்த உயர் பிச்சைப் பாத்திரம் அல்லவா? எந்த உயிராலும் தள்ளி வைக்க முடியாத தொப்புள் கொடியுறவு தாய்தானே.

உலகுயிர்களுக்கெல்லாம் பொதுமொழியாக இருப்பது தாய்மையொன்றே. மனித குலம் முதல் ஓரறிவு உயிர் ஈறாக ஒரு தாயின் தன்மையும் கருணையும் அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்துள்ளது. நான் கடந்து செல்லும் வாழ்க்கைப் பாதையில் காணும் ஒவ்வொரு பெண் குழந்தைக்குள்ளும் அன்புருவமாக ஒரு தாய் தென்படுகிறாள்.

திரு.வி.கா சொன்னதுபோல் ஓர் ஆணுக்குள்ளும் தாய்மை உறங்கிக் கொண்டிருகிறது. என் முன்னே வந்து போகும் ஒவ்வொரு ஆணுக்குள் உள்ளார்ந்து சிரிக்கும் தாயை உற்றாய்வதே என்னியல்பு.

ஒரு செடியோ கொடியோ மரமோ பூப்பூத்து சிரிக்கும்போதும் காய்காய்த்துக் குலுங்கும்போதும் ஒரு தாயின் ஆனந்த சிலிர்ப்பைக் காண்கிறேன். மரம் நிழல் தந்து உண்ணக் கனிகளைக் கனிவோடு தந்து எறும்பு, பறவை, அணில் முதல் அனைத்தும் துயில் கொள்ள மடி ஈந்தும் பேரழகில் தாயின் கருணையைத் தரிசிக்கிறேன். உலகுயிர் வாழ்வாங்குவாழ உயிர்வளி ஈந்து உலகைக் காக்கும் தாயாக பரம்பொருளின் திருக்கருணையை தாவரங்களில் காண்கிறேன்.

குருவிக் குஞ்சுகளின் ஆனந்த ஆலாபனையில் தன்னைக் கரைத்துக் கொண்டு சாலப்பரிந்து அழகுற உணவூட்டும் தாய்ப்பறவையின் சிறகடிப்பில் என் தாயையே ஆராதிக்கின்றேன். என் இளைய காலங்களில் பெருந்தவத்தோடு அடைக்காக்கும் தாய்க் கோழிகளோடு நிறைய உரையாடியிருக்கிறேன். தாயின் கதகதப்பான அரவணைப்பை அடைக்காக்கும் அந்த முட்டைகளின் இளஞ்சூட்டில் தொட்டுணர்ந்து மெய்சிலிர்த்திருக்கிறேன்.

கோழிக்குஞ்சுகளை தன் சிறகுகளுக்குள் நிழல் தந்து மண்கிளறி வழிநடத்தும் வித்தையை ஞானோபதேசம் செய்யும் தாய்க்கோழியும் எனக்குத் தாய்தான். என் அறிவு முற்றும் விழிக்காத வயதில் விடியற்காலைப் பொழுதொன்றில் காரணம் தெரியாமல் விறைத்து இறந்து கிடந்த தாய்க்கோழி பிரிவு என் நெஞ்சைப் பிழிந்தது. இறந்த தாயின் மீது பாசத்தோடு சின்ன அலகுகளால் தாயை துயிலெழுப்ப முயலும் கோழிக்குஞ்சுகளின் தீண்டுதலில் நானும் அழுதிருக்கின்றேன். அந்தத் தாய்க்கோழியின் தலைமகனாக ஈமக் கடமைகளையும் பிரிவாற்றாமையோடு செய்திருக்கிறேன்.

எங்கள் வீட்டு மனிதர்களோடு விடுபடாத உறவாக ஏதாவது பெயரில் நாய்கள் வந்து போய்க்கொண்டிருக்கும். பெரும்பாலும் ஆங்கங்கே கைவிடப்படும் நாய்க்குட்டிகளின் பாதுகாப்பு இல்லமாக என் தாத்தா அமைத்த ரகசியம் இன்று எனக்குத் தெள்ளிதின் புரிகிறது.

நாங்கள் வளர்த்த நாய்களில் பெரும்பாலனவைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களே வைத்திருந்தோம். அதில் ‘பொன்னம்மா’ என்ற நாய் நான்கு தலைமுறை வரை நீண்ட ஆயுள் பெற்றிருந்தது. ‘பொன்னம்மா’ ஈன்ற குட்டிகள் கண் திறக்காதபோது அவற்றை அன்பொழுக தூக்கி தாயாய் நானும் தாலாட்டுப் பாடியிருக்கிறேன்.

அந்த ‘பொன்னம்மா’ தாய் என்னை மட்டுமே தன் குழந்தைகளைத் தூக்க அனுமதிக்கும். ஒருமுறை என் நண்பன் குட்டியைத் தூக்கியபோது ‘பொன்னம்மா’விடம் தொடையில் கடி வாங்கியத் தழும்பு இன்றும் அவனை ஞாபகப்படுத்தும். அந்தளவிற்கு என்னை மதித்த ‘பொன்னம்மா’வில் தாய்மையைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். அதற்குப் பிறகு ‘பொன்னம்மா’ மகள் ‘சக்கரவேணி’யிலும் தாய்மையைப் பார்த்தேன்.

வீட்டின் பின்புறத்தில் தொழுவம் இருந்தாலும் அங்கே ‘இலட்சுமி’,’காமாட்சி’ போன்ற பசுவுரு தாங்கிய தாய்களைத்தான் நான் கண்டிருக்கிறேன். ‘இலட்சுமி’,’காமாட்சி’ அம்மாக்களின் பாலில் வளர்ந்த உடம்பு எனுடையது. எத்தனை ஆயிரம் முறை அவற்றை இறுக அணைத்து தாயின் சுகம் கண்டிருக்கிறேன். அவற்றின் வாசம் என் சுவாசப் பைகளில் இன்றும் பத்திரமாக சேர்த்துவைத்திருக்கிறேன்.

தாய்க்கு பிரசவம் பார்த்த பிள்ளைகள் மிக அரிதுதானே. ஒரு கார்கால மாலைப் பொழுதொன்றில் வீடு திரும்பாத ‘இலட்சுமி’யைத் தேடி நானும் தம்பியும் அலைகையில் பிரசவ வலியில் துடிப்புக்கு ஆறுதலும் தேறுதலும் அன்பும் அரவணைப்பும் தந்து மெல்ல புதுவுயிர் பிறப்புக்குத் துணை செய்தது இறக்கும் வர மறக்கமுடியாது. நன்றியோடும் வாஞ்சையோடும் அன்று ‘இலட்சுமி’ என்னை நோக்கிப் பார்த்த பார்வை இருக்கிறதே அதன் பொருளை உணர்த்த எந்த மொழிக்கும் வலிவிருக்காது.

இன்றுவரை எனக்கு எல்லாமுமாக இருக்கின்ற என் தாயின் மெளனத்தின் பொருளை முழுதாக மொழிபெயர்க்க இயலவில்லை. அறிவு நிலைகளில் நான் அம்மாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு தூரம் வந்தாலும் அன்பாலும் உணர்வாலும் என்றுமே வெல்ல முடியாத உயரத்திலே இருக்கிறார். உலகில் தலைச்சிறந்ததெல்லாம் தாயின் பூரணத்திலிருந்துதான் உருக்கொண்டதோ?. பாமரத்தனமான கரவற்ற எந்தப் பிரதிபலனும் கிஞ்சிற்றும் எதிர்பார்க்காத அன்புத் திருவுருவான என் தாயை மொழிக்குள் சொல்ல முடியாமல் தவிக்கிறேன்.

பாலைவனவெளிகளில் ஊடாடித் திரிந்த கலீல் ஜிப்ரானிடம் பாரதிபோல் எனக்கு தனிக் காதலுண்டு. கலீல் ஜிப்ரானின் ‘Prohpet’,’The secret of heart’...மெல்லிய உணர்வுகளில் நீந்தியிருக்கிறேன். ஒரு மாலைப் பொழுதில் கமீலா என்ற பெண் கலீல் ஜிப்ரானிடம் கூறினாள்,” நீ மட்டும் உலகத்தில் பிறக்காவிட்டால் வானத்தில் தேவதையாக இருந்திருப்பாய்’. அதற்கு கலீல் ஜிப்ரான், ”நான் இப்போதும் தேவதைதானே” என்கிறார். “ நீ தேவதை என்றால் உனக்குச் சிறகுகள் இருக்க வேண்டுமே” என்பது கமீலாவின் கேள்வி. அதற்கு கலீல், கமீலாவின் கைகளைத் தன் தோளில் போட்டுக்கொண்டு சொன்னார், “இதோ என் சிறகுகள்”.

நம்மில் பெருபாலோர் கமீலாவை கலீல் ஜிப்ரானின் காதலியாகத்தானே முடிவு செய்திருப்போம்.. ஆனால் கமீலா, கலீல் ஜிப்ரானின் தாய் என்றதும் உள்ளத்தில் எத்துணைப் பரவசம். நமது தாய்க்குள் அந்த ஆனந்த பரவசத்தை மீட்டுவதைத் தவிர வேறுவழியெதுவும் எனக்குத் தோன்றவில்லை.