திங்கள், 15 ஜூலை, 2019

கற்றல் சுகமா? சுமையா?.


ஒவ்வொரு நாளும் நமக்கு உள்ளும் புறமும் நிகழும் கற்றலில்தான் இந்த வாழ்க்கை தொடங்குகிறது. மனிதம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மேம்பட்டுச் சிறப்பதும் கற்றலினால்தான். கற்றல் என்பது என்ன? சுருங்கச் சொல்லின் தன்னை உணர்தல். கற்றுக் கொள்வதில் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?. நான் கற்றுக்கொண்டேன் என்பதைவிட என்னைச் சுற்றி இன்னும் கற்கவேண்டியவை நிறைய உள்ளன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இரத்தினச் சுருக்கமாகச் சொன்னால் கற்றது கை மண்ணளவு கல்லாதது உளகளவு என்பதுதான். அந்தச் சிறுவனை அவனது தந்தை குருகுலத்தில் கல்விக் கற்க  அனுப்பினார். காலம் உருண்டோடியது. “எல்லாம் கற்றுத் தெளிந்துவிட்டாய், சென்று வா” குருகுலத்தில் கல்வி முடித்த அவனை குரு வாழ்த்தி அனுப்பினார். தாம் எல்லாம் கற்றுக் கொண்டேன் கர்வத்தோடு இல்லம் திரும்பியவனை தந்தை கண்டு கொண்டார். “ எல்லாவற்றையும் கற்றுக்கொண்டாயா?” தந்தையின் கேள்விக்கு “குருவிடம் அனைத்தையும் கற்றேன்” என்ற மகனை நோக்கி “ எதைக் கற்றுக்கொடுக்க முடியாதோ?, எதைக் கற்றுக் கொண்டால் இந்த உலகத்தின் துன்பம் நீங்குமோ அதைக் கற்றுக்கொண்டு வா” என்று கட்டளையிட்டார் தந்தை. தந்தையின் குரலில் வெளிப்பட்ட உண்மையைப் புரிந்து கொண்டு மீண்டு குருவிடம் திரும்பி போனான். அவனைப் புரிந்து கொண்ட நானூறு மாடுகளைத் தந்து, “இவற்றை காட்டுக்கு ஓட்டிச்செல். இந்த நானூறும் ஆயிரம் ஆகியப்பின் திரும்பி வா” என்று கட்டளையிட்டார். நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி ஆண்டுகளும் ஆயின. தனிமை முதலில் சலித்தாலும் அதுவே வாழ்க்கையாகிப் போனது. தனிமை, இனிமையான மெளனமாகி தவமாகி விலங்குகளின் விலங்குகளின் மொழியும் மாடுகளின் பேச்சும் இயற்கையின் ஒவ்வோர் அசைவும் உணர்வும் புரியத் தொடங்கியது. ஒருநாள் “நாங்கள் ஆயிரமாகிவிட்டோம்” மாடொன்றின் பேச்சு குருவை நினைவுப்படுத்தியது. தூரத்தில் அவன் வருவதைக் கண்ட குரு அவன் கண்களில் பொழியும் கருணையை உணர்ந்துகொண்டு அருகில் வந்ததும் அன்போடு “இதோ ஆயிரத்து ஒன்றாவது விலங்கும் வந்துவிட்டது. இப்போது எல்லாவற்றையும் கற்றுத் தெளிந்துவிட்டாய்”  அவனை அணைத்தபடியே கூறினார். அந்தச் சிறுவன்தான் சுவேதகேது என்று உபநிசிதம் பகர்கின்றது. இதில் கற்றலின் ஆழ்நிலை உணர்த்துதல் மிக முக்கியம். தாயின் கருவறையில் குடியிருந்தபோதே ஒரு குழந்தையின் கற்றல் தொடங்கிவிடுவதாக அன்றைய இதிகாசமும் இன்றைய அறிவியலும் ஒருசேர சொல்கிறது. ஒவ்வொரு கட்டத்தில் கற்றல்தான் மனதுக்குள் மறைந்திருக்கின்ற எண்ணங்களைச் செயல் வடிவம் கொடுக்கின்றது. காலங்காலமாக அடிமைத்தனத்தில் ஊறி வளர்ந்த கறுப்பினக் குழந்தையொன்று தமது வீட்டுக்கு அருகேயுள்ள தெருவோரத்தில் பலூன் வியாபாரியைப் பார்க்கிறது. அவன் சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் எனப்  பல வண்ணங்களில் பலூன்களைக்  கயிற்றில் பிணைத்தபடியே குழந்தைகளை நோக்கி ஆரவாரத்தோடு கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தது அந்த பிஞ்சு நெஞ்சில் மகிழ்ச்சியை விளைவித்தது. அந்தக் காட்சியைக் குதூகலமாகக் கண்டு ரசித்த குழந்தை நம்பிக்கையோடு பலூன் வியாபாரியிடம் தன்னை மறந்து நகர்ந்து சென்றது. “பலூன் வேண்டுமா பாப்பா?. என்ன நிற பலூன் வேண்டும்?” வாஞ்சையோடு கேட்ட பலூன் வியாபாரியைப் புன்னகையோடு சற்று நேரம் உற்றுப்பார்த்து “உங்க கையிலே இருக்கும் கறுப்பு பலூன் மற்ற நிற பலூனைப்போல வானத்தில் பறக்க முடியுமா?” புரியாமல் கேட்டது. “பலூன் வானத்தில் பறப்பதற்கு அதோட நிறம் காரணம் இல்லம்மா கண்ணு. அதுக்குள்ள இருக்கும் காற்றுதான் அதைப் பறக்க வைக்குது” என்று செல்லமாக குழந்தையின் கன்னம் கிள்ளி கேட்ட கறுப்பு பலூனைத் தந்தார். குழந்தை மகிழ்ச்சியோடு அதை வாங்கித் தமது தலைக்கு மேலே பறக்கின்ற கறுப்பு பலூன் பறக்கின்ற காட்சியில் இலயித்தது. கற்றல் சுகமா? சுமையா?.கருத்துகள் இல்லை: