திங்கள், 23 ஜூலை, 2018

சினம் எனும் சேர்ந்தாரைக் கொல்லி....


உணர்ச்சிவசப்படும்போது மனிதன் விலங்காகிறான்; உணர்ச்சியை நிர்வகிக்கும் திறன் பெறும்போது மனிதனாகின்றான்; உணர்ச்சியிலிருந்து தன்னை வெல்லும்போது மட்டும்தான் தெய்வமாகின்றான் என்று எப்போதோ படித்த வாசகம் அவரைக் காணுந்தோறும் என்னுள்ளே எழும். இயல்பாகவே பேசும் தோரணையும் சில சமயம் பயன்படுத்தும் வார்த்தைகளும் தடித்திருப்பது போல இருந்தாலும் அவர் கொண்ட நேசமும் உணர்ச்சியும் உண்மை நிறைந்தவை. பிறர் மெச்ச வேண்டுமென்பதற்காக போலித்தனமான பாசமும் பொய்யான கோபமும் அவரிடம் இதுநாள் வரை நான் கண்டதேயில்லை. சிலவேளை அவரின் கோபம் உக்கிரமாக இருந்தாலும் சற்று நேரத்திற்கெல்லாம் தடம் மறைந்து போய்விடுமளவு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். பிறர்க்கு எப்படியோ என்மீது நல்ல அன்பும் மதிப்பும் கொண்டிருந்ததை பலமுறை உணர்ந்திருக்கின்றேன். வேலையிடத்தில் மயங்கி விழுந்துவிட்டார் என்று கேள்விப்பட்டு அவரின் இல்லம் சென்றேன். என்னைப் பார்த்ததும் மெத்திருக்கையிலிருந்து எழுந்து வந்தவரிடம்  நலம் விசாரிக்க “ஒண்ணுமில்லய்யா... கொஞ்சம் இரத்த அழுத்தம்ன்னு சொன்னாங்க,” அமைதியாகச் சொன்னார். எதிரிலிருந்த நாற்காலியில் என்னை அமரச் சொல்லி சைகை காட்டியபடியே கோப்பையிலுள்ள நீரை எடுத்து சில மிடற்று குடித்தார்.   “எனக்கு யார் மேலேயும் வருத்தமில்லை ஆனால் என்னை யாரும் புரிந்துகொள்ள மாட்டேங்கிறாங்க. என்னால் யாரையும் எதிரியாக நினைக்கவும் முடியலை. நான் மற்றவங்க செய்யறது தவறுன்னு தெரிஞ்சா உடனே திருத்த நினைப்பேன். சொல்லியும் கேட்கலன்னா சட்டுன்னு கோபம் வந்துடுது. அதைத்தான் கட்டுப்படுத்த முடியவில்லை.” அவர் உணர்ந்து சொல்வதை பொறுமையோடு கேட்டுக் கொண்டருந்தேன். இரண்டு நாட்களுக்குமுன் தனியார் கல்லூரியில் படிக்கும் தன் மகனோடு கொண்ட கோபத்தால் தாம் கண்டிப்புடன் பேசிய வார்த்தையை எண்ணி மனம் நொந்துபோய் பேசினார். “நான்தான் பிள்ளைங்கள புரிஞ்சிக்க மாட்டறேனா இல்ல பிள்ளைங்கத்தான் என்னைப் புரிஞ்சிக்க மாட்டறாங்களான்னு தெரியலைய்யா. எனக்கு வயசுதான் ஏறுதே தவிர எனக்குள் கோபம் குறைந்த மாதிரி தெரியல. எப்பவுமே கோபம்தான் எரிமலையாய் நிறைஞ்சி இருக்குதய்யா..” சிறு புலம்பலும் பேச்சில் தெறித்தது. சில மனிதர்கள் உணர்ச்சிகளைக் கெட்டிப்படுத்திக் கொள்வார்கள் பலர் கொட்டித் தீர்த்து விடுவார்கள். இவர் கொட்டித் தீர்க்கும் ரகம். நானறிந்தவரை அவரின் கடந்த கால வாழ்வனுபவம் கசப்பும் துவர்ப்பும் நிறைந்தவை. எப்போதாவது அரிதாக கொஞ்சம் இனிமை கலந்திருக்கும் பக்கங்களையும் பட்டும்படாமல் பகிர்ந்துள்ளார். வாழ்வின் அனைத்துத் துயரங்களையும் அனுபவித்துவிட்டு மெல்ல அதிலிருந்து வெளிப்பட்டு சொந்தமாகவே கடும் உழைப்பால் காலூன்றி எழுந்தவர் என்பதால் பிறர் துச்சமாகக் கருதும் எளிய செயலையும் அவரால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாமல் கோபம் முந்தி தள்ளும். ஒருமுறை அவரின் மனைவி இவரின் விருப்பத்திற்கேற்ப மரவள்ளிக்கிழங்கு அவித்து மசித்து தேங்காய்ப்பூவும் சீனியும் சேர்த்து உருண்டை பிடித்து வைத்தார். அதை அவரின் குழந்தைகள் அறவே சீண்டாததால் நம்மள மாதிரி கஷ்டப்பட்டு வந்திருந்தாதான்ன இதன் அருமை தெரியும். சொகுசா வளர்ந்ததால் இதையெல்லாம் சாப்பிடாம திமிரா நடந்துகிதுங்க பிள்ளைகள்மீது கடுங்கோபம் வந்ததாம். பிள்ளைகளிடம் கோபத்தால் வீம்பாக இரண்டு மூன்று நாட்கள் பேசாமல்கூட இருந்தாராம். அவரின் மனைவிதான் ஒருவழியாக அவரின் கோபத்தை அறிந்து சமாதானப்படுத்தினாங்க என்று என்னிடம் சிலமுறை அவரே ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். “நல்லவேளை.. யாரும் புரிஞ்சிக்கில்லனாலும் என் மனைவி புரிஞ்சிகிறதே ஆறுதலாய் இருக்குய்யா” தன்னையறியாமல் அவர் புலப்பியது என் காதிலும் விழுந்தது. தமது இளமைக்காலம் அதிக மனக் கொந்தளிப்புகளுக்கும் அலைகழிப்புகளுக்கும் ஆட்பட்டதால் அன்று ஏற்பட்ட காயத்தால்தான் இப்படியெல்லாம் கோபப்படுறிறேனோ என்று அவர் ஆதங்கப்படும்போது பரிதாபமாக இருக்கும். சிறுவயதில் தமக்கு ஏற்பட்ட வலிகளும் புறக்கணிப்பும் ஆற்றாமைகளும் குடும்பத்தின்மீது கோபமாக ஏற்றி வைப்பது முறையற்றதுதானே?.  மனித வாழ்க்கையில் இவையெல்லாம் போகிற போக்கில் நிகழும் சம்பவங்களே. சினம் இறக்கக் கற்பதற்கு நிறைய பக்குவமும் பொறுமையும் வேண்டும். எல்லாவற்றையும் அதனதன் போக்கில் இயங்குவதை மனமுவந்து ஏற்றுக்கொள்ளாதவரை கோபம் நம்மிலிருந்து நீங்காதுதானே?. கோபம்கூட ஒருவகை பற்றின் காரணமாகத்தானே ஏற்படுகிறது?

கருத்துகள் இல்லை: