புதன், 30 மே, 2018

புத்தனாக விரும்புகின்றேன்


“உங்களுக்குப் புத்தரை ரொம்ப பிடிக்கும் என்று தெரியும். வகுப்பில் பாடங்களினூடே நிறைய புத்தர் தத்துவங்களை பூடகமாகச் சொல்லியிருக்கீங்க. அதனால் எனக்கும் புத்தர்மீது ஒருவித அன்பு உண்டானது. உங்களுக்கு எதனால அவரைப் பிடிக்குமென தெரிஞ்க்கிலாமா?” புலனத்தில் புத்தர் படத்தோடு பொன்மொழியும் குறிப்பிட்டு அந்த முன்னாள் ஆசிரியர் கேட்டும் நான் பதிலெதுவும் அளிக்கவில்லை. இரவில் ஈப்போவிலிருந்து நான் புறப்பட்டு வரும்வேளை அந்த மாணவர் கைப்பேசியில் அழைத்து விளக்கம் கேட்டார். “சிலவற்றுக்கு காரணம் இருக்கும் இன்னும் சிவற்றுக்கு இருக்காது. மனிதன் எப்படி தோன்றினான்னு சொல்ல முடியும் ஏன் தோன்றினான்னு சொல்ல முடியுமா? அதுபோலத்தான் இதுவும்” நடிகர் சிவகார்த்திகேயன் பாணியில் கேள்வியைத் திருப்பிப்போட்டதும் அவர் மறுமுனையில் புன்சிரிப்பொலியோடு மெளனமாகிவிட்டார். “புத்தரின் இந்த மெளனப் புன்னகைதான் ஒருவேளை என்னைக் கவர்ந்திருக்குமோ?” கிண்டலாய் சொல்லி உரையாடலைச் சுருக்கமாக முடித்தேன். தொல்காப்பியன், திருவள்ளுவன், தாயுமானவர், வள்ளலார், பாரதி மீது ஏற்பட்ட தணியாத பாசமும் நேசமும்  தமிழால் அறிவால் உணர்வால் வந்தது. சிறுவயது முதல் என் இளநெஞ்சில் புத்தன்மீது பூத்த காதலுக்கு என்னிடம் தனிக்காரணமும் தெரியவில்லை ஏனென்றும் புரியவைல்லை. அந்த உந்துதலில்தான் புத்தன் பிறந்த லும்பினி’, ஞானம் பெற்ற போகையா’, ஞானத்தைச் சீடர்களுக்குப் பகிர்ந்த சரணாத்’, அவர் காலடிப்பட்ட குளித்த நர்மதா நதி என்று எல்லாம் ஒரு மதமற்ற யாத்திரீகனாய் எதுவும் சாராத மானுட சகபயணியாய் பெருந்தேடல் மனோபாவத்தோடு ஒரு காலத்தில் அலைந்து திரிந்திருக்கின்றேன். நம்நாடு உட்பட தாய்லாந்து, மியன்மார், கம்பூச்சியா, இந்தோனேசியா, நேபாளம், வட இந்தியா என புத்தனைக் கொண்டாடும் எல்லா பெளத்த மடாலயங்களுக்கும் கோயில்களுக்கும் சென்று புத்தனைக் காணாமல் திரும்பியிருக்கிறேன். செந்நிறம் அணிந்த சில புத்த சன்யாசிகளிடம் புத்தனின் சிந்தனைக் குறித்துப் பேசி அவர்களின் சடங்குப்பூர்வமான புரிதலால் மனம் மிகத் துவண்டிருக்கின்றேன். பெளத்தத்தைப் பின்பற்றும் நாடுகள் அன்புக்கெதிராக வன்மத்தையும் உயிர்க் கொலைகளையும் கிஞ்சிற்றும் கருணையின்றி செய்தபோதே புத்தனை நினைத்து இதயத்தில் இரத்தம் உறைந்து போனேன். அன்பும் சாந்தியும் சமாதானமும் நிலவுவதற்கு வித்திட்ட புத்தனின் சிந்தனையைச் சீழ்வடியச் செய்திருக்கும் புத்தப் பிக்குகளின் போக்கினைப் புறந்தள்ள தொடங்கினேன். உண்மையைக் கண்டடைய சொன்ன புத்தனுக்குப் பல்லாயிர உருவங்களை பொன்னாலும் பளிங்காலும் சமைத்திட்ட மதவாதிகளிடமிருந்து மிகத் தூரம் செல்லத் தொடங்கினேன். தேடொணா தேவனைத் தேடி என்னுள்ளே கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்று திருநாவுக்காரசர் கொண்டாடியதைப்போல பல்லாண்டுகள் வெளியில் எல்லாம் புத்தனைத் தேடித்தேடி இறுதியில் புத்தியில் உறைகின்ற புத்தனைப் புரிந்து கொண்டேன். அன்று தொடங்கி உள்ளம் வெள்ளைத் தாமரையாய் விரிய விரிய சொற்கள் இதழ்களாய் மெல்ல மெல்ல உதிர்ந்து வருகின்றன. முன்பு எந்த வினைக்கும் எதிர்வினையாற்றும் வேகம் மெல்ல மெல்ல குறைந்து வடிந்து வருவது தெரிகின்றது. எதுவும் நம்மால் விளையக் கூடியதே என்ற இறுமாப்பு எல்லாம் அதன்படி சரியாகத்தான் நடக்கிறதே என நம்பத் தொடங்குகிறது. தேடலில் இருந்த ஓட்டமும் ஆர்ப்பரிப்பும் சும்மாயிரு தேடுவதும் அடைவதும் எல்லாம் சுமையேயென போதுமென்று அடங்கி அமைதியாகி தலை வணங்குகிறது. இந்த எல்லையற்ற பிரபஞ்ச வெளியில் நானும் நான் காண்கின்ற அனைத்தும் சுவடில்லாமல் மறையப் போகிறது. நாளும் ஓடியாடி சேர்த்த கல்வி, உறவு, பொருள், புகழ் என எல்லாமே கையிலிருந்து மட்டுமல்ல நினைவிலிருந்தும் முற்றாக அழியப் போகிறது. நேற்று விசாக தினத்தில் புலனத்தில் வந்து விழுந்த பலநூறு புத்தரின் வாசகங்களில் என்றுமே என் கையில் எஞ்சியிருப்பதும் நான் மெய்யாக நம்புவதும் இந்தக் கணத்தில் வாழ் எனும் நிகழ்காலத் துளி மட்டும்தான். இங்கு நாம் எப்போதும் வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருப்பதில் காலம் கழிக்கிறோமேயொழிய வாழ்வதில்லை என்பது புத்தன் சொல்லும் சுடும் மெய்தானே?

கருத்துகள் இல்லை: