ஞாயிறு, 27 மே, 2018

நன்றி மறவாமல் இருப்பதுதானே ஆசிரியம்?


ஒவ்வொரு முறையும் பயிற்சி ஆசிரியர்கள் கல்லூரியெனும் வேடந்தாங்கலை விட்டுச் செல்லும் போதெல்லாம் ஏதேதோ ஆழமாக மனமுவந்து சொல்லத் தோன்றும் ஆனாலும் அவர்களின் முகங்களைக் கண்டதும் வார்த்தைகள் வற்றிப்போகும். சிலர் பிரியும் முன்பு சொல்லிச் செல்வர்; சிலர் மென்சோகத்தால்  சொல்ல வார்த்தையின்றி பிரிந்து செல்வர்; இன்னுஞ் சிலர் சத்தமில்லாமல்  சொல்லாமலே பிரிந்து செல்வர். விடைபெறும் காவியச் சிற்பங்கள் எனும் இந்த வகுப்பில் பலதரப்பட்ட சிறப்பியல்புகளும் திறமைகளும் அடங்கிய பயிற்சி ஆசிரியர்கள் நிறைந்திருப்பதை ஆரம்ப நாள் முதலே உணர்ந்துள்ளேன். பாடத்தைத் தாண்டி நாடகம், கவிதை, சிறுகதை, பேச்சுப் போட்டி, நடனம், குறும்படம், பயிலரங்கம், புத்தாக்கம், போன்றவற்றில் துடிப்பாகவும் புதுமையாகவும் ஒன்றிணைந்து செய்யும் வல்லமை கொண்ட பல்திறலாற்றல் மிக்க வகுப்பு இது. இந்தக் காவியச் சிற்பங்கள் கல்விக் கழக அனைத்து நடவடிக்கைகளிலும் மட்டுமன்றி தேசிய நிலையிலும் மிளிர்ந்த மிகச் செயல்திறமும் அறிவாற்றலும் படைப்பாற்றலும் மொழியாற்றலும் கொண்டது என்பதை இங்கு பயின்ற காலத்தில் பல போட்டிகளில் கலந்து நிருபித்துள்ளனர். மனத்தால் மலர்ந்திருக்கும் காவியச் சிற்பங்களின் அறிவாற்றலை இன்னும் பல்லாயிரம் முறை சாணை தீட்டியிருந்தால் இன்னும் இடைவிடாமல் உள்ளுணர்வை தொட்டிருந்தால் வானம் தொடும் தூரத்திற்கும் அவர்களால் சிறகு விரிக்க முடியும் என்பது என் நம்பிக்கை ஆனாலும் அதற்கான வாய்ப்பும் காலமும் எனக்கு போதிய அளவு வாய்க்கவில்லை என்பதைத் தவிர வேறெந்த குறையுமில்லை. தங்கத்தை உருக்கி எடுத்து அடித்து இழைத்து நகை செய்ய பொற்கொல்லன் தயாராக இருந்தாலும் தங்கமும் புடம் போடுவதற்கும் உருமாற்றிக் கொள்வதற்கும் ஒத்துழைப்பது அவசியமல்லவா?. கடந்த வாரம் நால்வர் நினைவுப் பரிசு தந்து சென்றனர். நேற்றும் விடைபெறும் நோக்கில் அறுவர் வந்து விரிவுரைஞர்களைக் கண்டு சென்றனர். என்னை நோக்கி வந்த அவர்களுக்கு வாழ்க என்ற ஒற்றைச் சொல்லைத் தவிர வேறொன்றும் கொடுப்பதற்கு என்னிடம் பெரிதாக எதுவும் இல்லை. நான் கற்றல் கற்பித்தலினூடே வகுப்பில் சொன்னதும் முகநூல் வழியாக எழுத்தில் சொன்னதும் போதுமெனவும் அதுவே நிறைவாகவும் நிறையவும் உள்ளதாய் நினைக்கின்றேன். நாளுக்கு நாள் பேசுவதற்குரிய சொற்கள் என்னிடம் குறைந்து வருவதாகே இப்போதெல்லாம் உணர்கின்றேன். ஆனாலும் கல்லூரியின் இறுதி நாளில் பிரியவிருக்கும் அவர்களிடம் ஒருசில வார்த்தைகள் உளமார பரிமாறினேன். “வாழ்க்கை மிகமிக அழகானது மட்டுமல்ல கொண்டாடக்கூடியது. நம் எதிர்பார்ப்புக்கு முரணாக சிலவேளை அமைந்தாலும் அது பொருள் நிறைந்தது. வெறும் மனத்தால் வாழ்ந்து தீர்த்து முடிப்பதற்கு மட்டுமல்ல இளமை. அறிவைக் கூர்மைப்பட அழகுற செய்து வாழ்வில் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்களை வேரறுத்து வெளிச்சம் பாய்ச்ச வேண்டிய அவசியமும் இளமைக்கு தேவையாகிறது. அதற்கும் மேலாக உள்ளுணர்வை உணர்ந்து இந்தப் பிரபஞ்ச வெளியோடு ஒன்றிணைந்து வாழும் பேரின்ப வாழ்வை இப்போதே சிந்திக்க வேண்டுவதும் அவசியமாகிறது. இந்த அற்புதமான ஆசிரியப் பணியில் ஒவ்வொரு மாணவனிடத்தும் மேற்சொன்ன மூன்றையும் விதைக்கப்போகும் உங்களை வாழ்த்துகிறேன்” என்று இரத்தினச் சுருக்கமாக விடை கொடுத்து அனுப்பினேன். இன்று புதிதாய்ப் பிறந்தேன் பாரதி சொல்வதுபோல ஒவ்வொரு நாளும் விடியலும் இருளும் புதிதே. ஒவ்வொரு நாளும் மலர்கள் மலர்வதும் உதிர்வதும் புதிதே. ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் கூடுவதும் குறைவதும் புதிதே. அதேபோன்று இந்த வாழ்க்கைப் பயணத்தில் நிகழும் சந்திப்பும் பிரிவும் புதிதே. இந்த இணைப்புகளுக்குள் நிகழும் உணர்வுப் பீறிடல்களும் வழிந்தொழுகும் உணர்ச்சி வடிகால்களும் என்றும் புதிதே. அந்தப் புதிதில் பெறுவதில் மகிழ்ச்சியையும் இழப்பதில் துன்பத்தையும் பெரும்பாலும் சராசரி மனிதனால் சமனாகப் பார்க்கவோ உணரவோ இயலாது. இன்பத்தில் சிலிர்த்துப் போகிற மனம் சோகத்தின் கனம் தாளமுடியாமல் கண்ணீரில் கரைந்துவிடுகிறது. இனி இவர்கள் காலடி எடுத்து வைக்கவிருக்கும் இந்த ஆசிரியமெனும் வாழ்க்கைப் பயணத்தில் எழுதப்போகும் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாய்க் கருதும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ கழிவுகளை  யார் வந்து கொட்டினாலும் அதையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு மழைத்தூறலில் மணக்கும் தாய்மண்ணைப் போன்று எதையும் புறக்கணிக்காமல் நான் பணிசெய்து கொண்டுதானிருக்கிறேன். எத்தனையோ எண்ண விதைகளை இந்த ஆசிரியக் காட்டில் நான் தொலைத்தப் பின்னும் இன்னுமின்னும் பூக்கத்தான் செய்கிறேன். ஆசிரியத்தோடு ஒன்றித்து வாழும் உந்துதல் உள்ளவரை யாரும் எதையும் இழப்பதில்லை. இந்த சூட்சுமத்தை உள்ளுணர்வில் பதித்துக் கொண்டால்  ஆசிரியம் என்றுமே வளர்முகம்தான். இதுவரை கற்ற கல்விக்கும் நாளை வாழப்போகும் வாழ்க்கைக்கும் என்றென்றும் நன்றி மறவாமல் இருப்பதுதானே ஆசிரியம்?

கருத்துகள் இல்லை: