ஞாயிறு, 17 மே, 2009

இதயத்தில் இனித்திடும் இறந்த காலங்கள்

இதயத்தில் இனித்திடும் இறந்த காலங்கள்
இலக்கியங்களுக்கும் எனக்குமுள்ள உறவும் தொடர்பும் தொப்புள்கொடியில் தொடங்கியதல்ல. ஊழ்வினைப் பயனோ எனக்கு வாய்த்த வரமோ நானறியாமலே என்னுள் நிலைப்பெற்ற பேறு. இந்த இன்ப உறவை புனித பந்தத்தை என் உயிராகவே கருதுகிறேன்.
என் இதயத்துள் புதைந்திருந்த இலக்கிய உணர்வினை தொட்டெழுப்பியதில் பெரும் பங்கு என்னோடு வாழ்ந்த மண்ணையும் மனிதர்களையும் சாரும். அந்தத் தோட்டத்து மக்களை வாசிக்கும்போது ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு உலகம் விரிந்து செல்வதை என்னால் உணரமுடிந்தது.
‘என்னை எழுத வைத்தது வான்’ என்று பாரதிதாசன் கூறியதுபோல என் கற்பனை முகடுகளில் தடம் பதித்து தமிழ்க்காவியம் பாட வைத்து எண்ண ஏர் கொண்டு எழுத்தாய் காகித வயலை உழ வைத்து கவிப்புறாவின் காந்தர்வச் சிறகுகளை சொல் வானமெல்லாம் சிறகடித்து இதயமெல்லாம் இரண்டறக் கலந்தினிக்கும் என் தாய்மண்ணே உன்னில் மீண்டும் தலைசாய்கிறேன்.
எத்தனையோ பூபாளப் பொழுதுகளில் புல்லாங்குழல் நாதம் தேன்மழையாய் செவிமடல்களில் பாய்ந்தாலும் உன் தாயன்புக்காக மீண்டும் நான் சேயாய் தவிக்கிறேன். என் சிந்தனை பறவை சிறகடிக்கிற தேவவேளை இது.
இளமை பூரிப்போடு நிமிர்ந்து நிற்கும் மூங்கில் காடுகளைப் பார்த்துப் பரவசப்படுகிற பால்மணம் மாறாத பருவ மனத்தோடு என் பழைய பசுமை நாட்களில் உலா வருகின்றேன். என் நினைவுகளின் பின்வீச்சு சலனமற்ற கால வெள்ளத்தின் வெளிச்ச விளிம்பைத் தொட்டுப் பார்க்கிறது
மேனியில் புழுதிப் படிந்தாலும் மனதிலே மாசு படியாத அந்த இறந்த காலங்களை இதயத்தில் இனிக்கும் இளைய காலங்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். பள்ளி முடிந்து பட்டம் விட்டு மனது மகிழ்ச்சியில் துள்ளித் திரிந்த பருவம் இன்பப் பருவமது.
ரப்பர் பாலை தேடியெடுத்து காகிதங்களில் தென்னங் குச்சிகளை வளைத்து வைத்து பட்டம் செய்வதிலேயே நாட்கள் நகரும். செய்த பட்டத்திற்கு நீண்ட குட்டை வால்களை அலங்கரிப்பது தனியின்பத்தைத் தரும். ஒரு நாள் பட்டம்விடும் உற்சாகத்தில் தன்னையே மறந்த நண்பன் காலில் கண்ணாடித் துண்டை மிதித்துத் துடித்தக் காட்சி இன்றும் என் நினைவுகளில் மின்னலிடுகிறது.
என் புண்ணிய பூமியில் அறிவியல் வெளிச்சம் புகாத அந்த அந்தக நாட்கலில் தொலைக்காட்சி, வானொலி கருவிகள் எல்லாம் காண்பது அரிது. தோட்டத்தில் யாரோ இருவர் வீட்டில்தான் வானொலியைக் கண்டதாக ஞாபகம். நாளடைவில் பல வீடுகளிலும் வானொலி மெல்ல நுழையத் தொடங்கியது.
நான் முதன் முதலாக தொலைக்காட்சியைப் பார்த்தது தோட்டக் கிராணி வீட்டில்தான். தொலைக்காட்சி பார்க்க வேண்டும் எனும் உந்துதலில் கிராணி வீட்டிற்குப் பறப்பட்ட நானும் என் நண்பர்களும் எப்படியெல்லாம் அவரின் பிள்ளைகளின் கட்டளைகளுக்கு மனம் வாடாமல் சேவை செய்தோம் என நினைத்தால் இப்போது வேதனையாக உள்ளது.
அந்த மேல்தட்டு பிள்ளைகளின் ஏவலுக்கிணங்க பூச்செடிகளுக்கு நீரூற்றுவதிலிருந்து உடம்பு பிடிப்பதுவரை செய்ததை நினைத்துப் பார்த்தால் சின்ன மனத்தின் ஆசைகள் எப்படியெல்லாம் எங்களை அடிமைப்படுத்தியுள்ளது என்று தெரிகிறது. பூச்செடிகளுக்கு நீரூற்றினால்தான் கறுப்பு வெள்ளை ‘கெளபாய்’, ’கார்டூன்’ படங்களை ஐந்தடியில் நின்று பார்க்க அனுமதிக்கப்படுவோம் இல்லையேல் விரட்டியடிக்கப்படுவோம்.
தோட்டத்து இலையுதிர் காலங்களை என்னால் கொஞ்சமும் மறக்கவியலாது. கோடைக்கனல் கொப்பளிக்கும் வெப்பப் பொழுதுகளில் மேலாடைகளை களைந்து நிர்வாணமாய் காட்சியளிக்கும் ரப்பர் காடெல்லாம் வெளிச்சம் விழுதுவிட்டிருக்கும்.
உதிர்ந்து விழும் இலை சருகுகளில் நடக்கும்போது ஏற்படும் சரசர ஓசை இன்னும் காதில் ஒலிக்கிறது. இலையுதிர் காலத்தில் புகை மூட்டத்தையோ நெருப்பொளியையோ ரப்பர் காட்டில் கண்ணுற்றால் உடனே தோட்டத்தில் இரும்பு மணி அடிக்கப்படும்.
இதற்காகவே காத்திருக்கும் நானும் என் தோழர்களும் தோட்டத்து ‘டிரக்டரில்’ முண்டியடித்துக் கொண்டு ஏறுவோம். தளிர்களையும் கோணிப் பைகளையும் கொண்டு ஓடியோடி தீப்பரவாமல் அணைப்போம்.எங்கள் ரப்பர் மரங்களை தீயிலிருந்து காப்பாற்றியதற்காக கிராணியார் பத்து அல்லது இருபது காசுகளை எண்ணித் தருவார்.
உன்னதமான இசையின் உயிர் அடங்குகிறபோது மெல்லிழையோடும் நாதத்தைப் போல் என் மன ஆழத்தின் மெளனமான மூலையில் எங்கோ அந்த நினைவு புலம்பிக் கொண்டே இருக்கிறது. தமிழ் வாசத்தோடு இடைநிலைப் பள்ளிக்கு இடம் பெயர்ந்த அந்த இறுக்கமான நாட்கள்; மாலை பள்ளியாதலால் மனதிற்குள் கவலை வீட்டிலுள்ளவர்க்கோ பூமழை.
விடுமுறை நாட்கள்போல் இனிமேல் காலையில் ரப்பர் காட்டுக்குள் காலையில் வசித்துவிட்டு மாலையில் இடைநிலைப் பள்ளியில் வாசிக்க வேண்டியதால் மனம் கனமாகிப் போனது. பால்மரக் காட்டிலே பாடுபட்டு நேரமில்லாமல் பள்ளிக்குப் பசியோடு நானும் என் நண்பர்களும் ஓடிய நாட்கள் பல.
குளித்தப் பின்னரும் உடலில் பட்ட ரப்பர் பால் சரியாக நீங்கப்பெறாமல் பல நாட்கள் பள்ளிச் சென்றிருக்கிறேன். ஒரு நாள் சீன ஆசிரியரொருவர் சுட்டிக் காட்டி கிண்டல் செய்தது என்னுள் வருத்தத்தை ஏற்படுத்தியது.
அப்போது வறுமை அரக்கனின் வாய்க்குள் நொறுங்கிக்கொண்டிருந்த பொல்லாத வேளையென்றாலும் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு கல்வியை நோக்கி என் இதயம் பயணம் போனது இன்னும் என்னுள் பிரமிப்பூட்டுகிறது.
இளைய நாட்களில் தெளிவற்ற நீரோடைகளில் கூழாங்கற்கள் ஏற்படுத்துகிற சலனத்தைப்போல என் எண்ண விரிசல்களில் திரைப்படங்கள் சில உறுத்துதல்களை உண்டாக்கிவிட்டிருந்தன. இன்று திரைப்படங்களைக் காண்பதற்கு ஆர்வமில்லாத நான் அன்று தமிழ்த் திரைகளை நேசித்ததாகவே தெரிகிறது.
எனது பால்ய நினைவுகளிலிருந்து இன்னும் உதிர்ந்து போகாமல் அந்த நாள் இன்றும் என்னுள் பிரகாசிக்கிறது. எனது பக்கத்து தோட்டத்தில் (புக்கிட் சிலாரோங் - கெடா) மாதத்திற்கொரு முறை இரவில் திரைப்படம் காட்டப்படும். இதைக் காண்பதற்கென்றே நானும் நண்பர்களும் மிதி வண்டியில் புறப்படுவோம்.
அங்கு பார்த்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ ‘தங்கப்பதக்கம்’ போன்ற பல திரைப்படங்கள் நினைவில் இன்றும் சிரிக்கிறது. நள்ளிரவு படம் முடிந்து பயத்தோடு வீடு திரும்புகையில் நண்பனின் மிதிவண்டியின் சங்கிலி அறுந்து விழ உதவிக்கு வேறு துணையின்றி விரைந்து தள்ளி புறப்படும்போது கீழேவிழுந்து உண்டான காயத்தின் வடு கதை சொல்கிறது.
என் உயிர்க்காற்று கலந்துலவும் இந்தப் புண்ணிய பூமியில் நான் உலவிய அந்த பிஞ்சு நாட்கள் என்னுள்ளே அழியாத கோலங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. சிதைந்தும் சிதையாமலும் நெஞ்சத்தில் நின்றாடும் அந்த இளைய நாட்களை ஏக்கத்தோடு இன்றும் நேசிக்கின்றேன்.

1 கருத்து:

கே.பாலமுருகன் சொன்னது…

இறந்த காலம் ஒரு ஓசையைப் போல நமக்குள் சன்னமாக ஒலித்துக் கொண்டேயிருக்கிறது ஐயா. வாழ்வின் மிக அருகாமையில் இருந்துகொண்டு இறந்தகால நினைவுகளை நேசிக்கும் உங்கள் மனம் உங்காள் வாழ்வின் மீதுள்ள பிரிக்க முடியாத படிமங்களைக் காட்டுகிறது. வாழ்த்துகள். பதிவு அருமை.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி