ஞாயிறு, 17 மே, 2009

என்ன வளமில்லை தமிழ் மொழியில்

என்ன வளமில்லை தமிழ் மொழியில்
தமிழைப் படிக்கின்றபோது ஏற்படுகின்ற இன்பமிருக்கிறதே அதை வார்த்தைகளால் சொல்லிட முடியாது. அதிலும் அதன் இலக்கணச் சிறப்பிலும் இலக்கிய வளத்திலும் காலூன்றி கற்க விழைந்திட்டால் நம்மை பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும்.
தமிழின்பக் கடலில் முத்தெடுக்கத் தொடங்கிவிட்டால் அதுவே நம்மை பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும். அதனால்தான் என்னவோ சங்கக்கால பெயர் குறிப்பிடாத புலவனொருவன் ‘ இருந்தமிழே உன்னால் இருந்தேன் – இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’ என்றார் போலும்.
விந்தைமொழிச் செந்தமிழ்ப்போல் உலகில் வேறுமொழி இல்லையென எல்லீசர், ஜி.யு.போப்பையர், வீரமாமுனிவர் போன்ற மேனாட்டு அறிஞர் பகன்றதை எண்ணிப்பாருங்கள். ஆங்கிலத்தில் சிந்தைக்கவர் பெண்களுக்கெனப் பருவமெனும் சொல்லொன்றே ‘உமன்’ என்பதாகும்.
நந்தமிழில்தான் ‘பேதை’,’பெதும்பை’,’மங்கை’,’மடந்தை’,’அரிவை’,’பேரிளம் பெண்’ என்று சொற்கள் பல்கிப் பெருகியுள்ளன. பூக்களின் பருவத்தை தமிழரைவிட அழகுறச் சொன்னவர் யார்? ‘அரும்பு’,’மொட்டு’,’முகை’,’மலர்’,’அலர்’,’வீ’,செம்மல்’ அமுதாக ஏழுநிலை அடுக்கி வைத்தானே.
தருக்களிலே இலையுண்டே அதற்கும் தமிழில் பருவங்கள் உள்ளன. ‘கொழுந்து’ இளமைப் பருவத்தை ‘தளிர்’ என்போம். இலை,’பழுப்பு’,’சருகு’ என்ற சொற்களெல்லாம் தமிழிலுண்டு. ஆல், அரசு,,அத்தி, பலா, மா, வாழைக்கோ அழகு ‘இலைகள்’ என்போம்.
அகத்தி போலிருக்கும் செடி பிறப்பைக் ‘கீரை’ என்போம். பூமியிலே படரும் வகை தாவரத்தை ‘பூண்டு’ என்றும் அருகு, கோரை போன்ற சப்பாத்திச் செடியைத் ‘தாழை’ என்றும் கரும்பு நாணலை ‘தோகை’ என்றும் உடலோங்கி நிற்கின்ற பனைதென்னைக்கோ ‘ஓலை’ என்று பெயரிட்டோம்.
மேற்கண்ட சொற்சிறப்பெல்லாம் பிறமொழிக்குள் வலைபோட்டுத் தேடினாலும் கிடைப்பதில்லை. கடலைப்போல் பரந்திருக்கும் தமிழில்தான் களஞ்சியம்போல் கணக்கிலா சொற்களுண்டு.
நீல வண்ணக் கடல்நீரை இரைத்துக் கொண்டிருந்தபோதும் கடுகளவும் குறையாமல் இருப்பதைப்போல் கடன் கொடுத்தும் பிறமொழிகள் கவர்ந்து சென்றும் கட்டுடலம் குலையாமல் கன்னிமாறா உடலழகைப் பெற்றதெங்கள் தமிழே என்ற உண்மையினை மறுத்திடுவோன் மடையனாவான்.
ஆங்கிலத்தை உலகமொழி என்கிறோமே அதுகூட கடனாளி நம் தமிழுக்கு, மாங்காயை நாம் தந்தோம், ’மெங்கோ’ என்றான். ‘சாண்டல் ஊட்’ என்கிறான் நாம் கொடுத்த சந்தனத்தின் மணம் நுகர்ந்து.
அரிசியை ‘ரைஸ்’, இஞ்சியை ‘ஜிஞ்சர்’, அணைக்கட்டை ‘அணைகட்’ என்று ஆங்கிலமாக்கியவன் வெள்ளையன். தனித்தினிக்கும் தாய்ப்பாலில் சர்க்கரையும் நீரும் தேவையில்லை என்பதுபோல தனித்தியங்கும் வல்லமை தமிழுக்குண்டு.
தமிழ் தன்காலில் தான்நிற்கும் பிறரைத் தாங்கும். அணித்தமிழில் பிறமொழியைக் கலந்துவிட்டால் அழகாக வளருமென்போர் அறிவிலிகள். தனித்திருகும் அரிசியிலே கல்கலந்தால் தின்பவரின் பல்லுடையுமே தவிர சுவைத்திடாது.
ஓரெழுத்து ஈரெழுத்து மூவெழுத்து நான்கெழுத்தென எத்தனையோ சொற்கள் அடக்கமாகி பொருள் கொண்டிருக்கும். மூன்று இலக்கத்திற்குமேல் சொற்களிருக்க தமிழ் பிறமொழிகளிடம் கடன் வாங்கத் தேவையில்லை.
நீர் மிதக்கும் கப்பலுக்கு நங்கூரம்போல் மரங்களுக்கு வேரிருந்து காப்பதுபோல் மக்கள் வாழ்வில் வேர்ப்பிடிப்பாய் இருப்பததன் மொழியே. இட்லர் போர்வெறியன் தானெனினும் அவனுங்கூட ஒன்றைச் சொன்னானே ‘ஓரினத்தைச் சீரழிக்க வேண்டுமென்றால் மொழியைச் சிதைத்துவிடு; இனம் தானாக அழிந்தேபோகுமென்றானே’.
விரல்களெல்லாம் பறித்தாலும் உடலிருக்கும்; விலா எலும்பை முறித்தாலும் உயிரிருக்கும் ஆனால் குரல்வளையை நெறித்தபின்னே உயிரா மிஞ்சும் அதுபோல குலமொழியை அழித்துவிட்டால் இனமேயில்லை
இருள்கவிந்தால் ஒளிகிளம்பி விரட்டுதல்போல் இன்னுயிராம் தமிழ்க்கின்னல் சூழுமென்றால் திரள்திரளாய் ஒளிப்பிழம்புத் தீரர் கூட்டம் திரண்டெழுந்தால் பகையிருட்டுத் தூள் பறக்கும்.
மொழியென்றால் மனிதனுக்கு உயிரின்மூச்சு; மூச்சுதனை இயக்குகின்ற உயிர்ப்புக்காற்று. மொழிதான் குமுகாயத்தை முறியாமல் காக்கும் அச்சாணி. பேசும் மொழியொன்றே இலக்கியங்கள் பிறப்பதற்கு மூலமாகும்; வம்சப் பூ மலர்வதற்கே அதுவே இரத்தநாளம்.
மொழிப்பற்றும் இனப்பற்றும் இருப்பவனே முழுமனிதன். செழிப்புற்று வளர்ந்துயர்ந்து ஓங்கிநிற்கும் ஜாப்பனியர் பிரான்சு நாட்டார் கொண்டிருக்கும் மொழியுணர்ச்சி நாம் பெற்றாலே விடிவுண்டு. நாகரிக வளர்ச்சிக்கும் நம் இனத்தின் நல்ல மறுமலர்ச்சிக்கும் புதுவெள்ளம்போல் வேகமாக அறிவெழுச்சிப் பெறுவதற்கும் மொழியே வேண்டும்.
தமிழின் வளமறிந்து இருபத்தோராம் நூற்றாண்டின் தேவையறிந்து அறிவியல் தொழில்நுட்ப சொற்களைப் பெருக்கி கணினி போன்ற நவின கருவிகளிலும் தமிழை உலாவரச் செய்வது தமிழனின் கடமையாகும்.
தமிழைக் குறைகூறி வாளாவிருப்பதைவிட்டு இனியாகிலும் தமிழன் தமிழின் நிலையுயர்த்த நினைப்பானா?

1 கருத்து:

Dev@Theventiran சொன்னது…

ஐயா, உங்களின் இக்கட்டுரையை வாசித்தப் பின் நிறைய தகவல்களை அறிந்துக் கொண்டேன்.நன்றி