புதன், 21 ஜனவரி, 2009

கண்ணதாசா.... என் கவிநேசா

‘தமிழில் ஒரு கவிமகனைச் சிறுகூடற்பட்டியல் தந்த மலையரசித்தாயே’ என்று தமது மூலத்திற்கு முன்னுரைக் கூறிய காலத்தில் அழியாத காவியம் தரவந்த கவிமன்னனே, கன்னித்தமிழில் செழுங்கனித் தீஞ்சுவைக் கலந்து செவிமடல்களில் தேன்பாயும் சொல்லெடுத்து தித்திக்க தித்திக்க தீந்தமிழமூதூட்டிய செந்தமிழ்த் தேர்ப்பாகனே, நின்றன் எண்ணத்தில் விதையாய் விழுந்து தளிராய் நடைப்பயின்ற கவித்துவத்தை பேருவகையோடு நெஞ்சம் நெகிழ நினைத்துப் பார்க்கிறேன்.
சங்கத்தமிழ்ச் சாரத்தினைக் கவிதைப் பொங்கலாகக் கன்னல் கன்னல் நடையில் கருத்துப் பொலிவும் கவிதைச் சிறப்பும் மிளிர சிந்தையணு ஒவ்வொன்றிலும் சிலிர்த்து நிற்கும் உயிரோட்டமும் உணர்ச்சிப் பெருக்கும் மேவிட பாரிடை பட்டொளி வீசி பகழ்க் கொடி பரப்பிய பா வள்ளலே உன்னைப் பாடுவதற்கு வார்த்தைகளுக்காக தவமிருக்கிறேன்.
உயிர்ப்பெல்லாம் உணர்வெல்லாம் உள்ளக் கிளர்ச்சியெல்லாம் உள்மனச் சிரிப்பெல்லாம் எண்ணமெல்லாம் எழுச்சியெல்லாம் எழுத்தெல்லாம் எழிலெல்லாம் கவிதையாக ஊன்மணக்க உயிர்மணக்க வடித்துத் தந்த கவிச்சிற்பியே, காலத்தையும் கடந்து நிற்கும் நின்றன் உள்ளூரக் கள்ளூரும் கவியழகில் என் கவிமனத்தை கற்பூரமாய் கரையவிட்டு மீண்டும் உன் பொன்வரவுக்காகக் காத்து விழி பூத்து நிற்கின்றேன்.
உன்றன் கவி மலர்களில் கவின்வாசம் நாள்தோறும் தமிழறிந்தோர் செவிகளிலெல்லாம் செந்தேன் வெள்ளமாக சந்தனக் காட்டினுள்ளே சதிராடும் தென்றல்போல் மந்திர நடையும் மயக்குறு மொழியும் கொண்டு சீருலா வருகின்றது.
பாமர மக்களின் இதய சிம்மாசனத்தில் இலக்கியத்தின் இன்பமணிமுடி சூடிய மாக்கவிஞனே காற்றின் ஓசையிலெல்லாம் உன் இதயயாழ் மீட்டிய இன்ப கீதங்கள் உயிர்க் கவிதையாய் உலா வந்து கொண்டிருக்கும். பத்து விரல்களிலும் பாட்டினை ஊற்றி வைத்து முத்தாய் செந்தமிழை உதிர்த்த முத்தையாவே, உன் கவித்துவம் என்றும் அமிழ்தச் சுவையாய் தழைத்திருக்கும்.
இருபதாம் நூற்றாண்டின் தமிழிலக்கிய வானிலே சுடர்விட்ட முழுமதியே, உனைப்போல் புகழ் மகுடம் சூட்டி மக்கள் போற்ற வாழ்ந்த கவிஞன் வெகுசிலரே. தமிழ் மொழியின் தவப் புதல்வனாகச் ‘ஈரும் தலையும்’,’எதுகையும் மோனையும்’,’பாட்டும் பொருளும்’ கைக்கட்டி சேவகம் செய்ய கால்நூற்றாண்டுக்கும் மேலாக கவிச் சக்கரவர்த்தியாக பவனி வந்த கவிநாயகனே, நீ தமிழ் நெஞ்சினர்க்குக் கிடைத்த அருங்களஞ்சியம்.
என் பாட்டுத் தோட்டத்தில் பாடித் திரிந்த வானம்பாடியே, உன் கவிதைச் சிறகின் கந்தர்வ நிழல் எவ்வளவோ சுகந்தமும் இனிமையும் உள்ளதாய் ஒலி மண்டலம் முழுதும் நிறைந்து வழிகிறது. பாரதிக்குப் பிறகு பாரதிதாசனில் தமிழின் மேதை தெரிந்தது; உன்னில்தான் இன்பத் தமிழ் போதை தெரிந்தது. கம்பனுக்குப் பிறகு சந்தம் உன் ஒருவனிடத்தில்தான் சரணம் அடைந்தது.
பாடலுக்குப் பொருளான பழந்தமிழ் வேதமே! ஒளிப்பால் நீ சிந்துகிற ஒய்யாரச் சந்திரனின் மஞ்சளுக்கு உதாரணம் சொல்லிக் கொண்டே வாழ்ந்தபோதே வாடிப் போனவர்களுண்டு; கண்ணா! நீயோ சீதள இரவுகளில் மானிட விடியலுக்காகக் கவிதை மலர்களைத் தொடுத்த காவிய நாயகன். பெண்ணின் கூந்தல் அழகை மட்டும் நீ வர்ணித்தவன் அல்ல; குழி விழுந்த கன்னங்களிலும் உன் கவிதை முத்தம் மாறாமல் விழுந்திருக்கிறது.
மூன்றாம் பிறையைப் பார்த்ததும் ஆசைக்குரியவளின் நெற்றி மாத்திரம் உன் நிணைவுக்கு வரவில்லை; காலக் காற்றில் ஆடிப்போன மனித மரங்களின் வளைந்துபோன கூனல் முதுகும் உன் நினைவுக்கு வந்தது. திரையிசைப் பாடல்கள் உன்னால்தான் சிரஞ்சீவித்தன்மை பெற்றன. சந்தப் பேதமின்றி சுத்தமான பாட்டில் இனிமை சேர்த்த ராஜகவியே, உன்னைப் போல் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமாக விரித்து வைத்தவர் யாருமிலர். உனது பலத்தையும் பலவீனங்களையும் உலகறிய உளறிய பச்சிளங் குழந்தை. நீ அஞ்ஞான அஞ்ஞாத வாசத்தை ‘வனவாசம் ஆக்கினாய். நாளும் பட்டு பட்டுத் தெளிந்து பட்டறிவை ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ ஆக்கினாய். இலக்கிய மழையில் நனைந்து அதன் வாசத்தைத் ‘தென்றலில்’ உலவவிட்டாய்.
நீ சலனப்பட்டிருக்கிறாய்; மதுவிலும் மாதுவிலும் மயக்கமுற்று உன்னை இழந்திருக்கிறாய்; உணர்ச்சி வசப்பட்டு அரசியலில் களம் புகுந்தாய்; ஆனாலும் புகழ் வருமென்று பொய்யுரைக்கவில்லை; இகழ்வார்களென உண்மையைச் சொல்லாமலும் இருந்ததில்லை. மானுட வாழ்வை பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு கோணங்களில் சிந்தித்து சமூக வாழ்க்கைக்கான பாடப் புத்தகங்கள் அளித்தவன் நீ.
கற்பனைக் கடலாடி முத்தெடுத்து, பசியால் தவித்து, தாகத்தால் அலைந்து, கானல் நீராடிய மரத்தின் நிழலில் கற்பகம் கண்டு ஆயக் கலைகள் அனைத்தும் அனுபவத்தால் தெளிந்த கவிப் பறவையே,’கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று உனக்கே பல்லவி பாடி திரையுலகில் அடியெடுத்து வைத்தாயே.
உன் வாழ்வில் எல்லாமே விதிப்படி நடந்ததால்தானோ எங்குமே தத்துவ மழை பொழிந்தாய் ஒரு மகா ஞானியைபோல. உன்னில் கருத்தூற்று மழையூற்றாய் பெருக்கெடுக்க நினைத்தவுடன் அருவியெனக் கவிபொழியும் உன் நாவினிலே கலைமகள் ஆனந்த வீணையை மீட்டி பெருமிதத்துடன் வீற்றிருந்தாள்.
காய்த்த மரத்திற்கே கல்லடி என்பதுபோல் சொல்லடி வல்லிடியாய் வந்தாலும் ‘போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும்’ என எல்லா கண்டனக் கணைகளையும் கனிவோடு ஏற்ற மாமலையே, நீ அழுதாலும் சிரித்தாலும் சினந்தாலும் உன் கவிதையின் ஒவ்வோர் அணுவிலும் இனிமை இழையோடுவதை உன்னை விமர்சிப்பவன் கூட உணர்கின்றான்.
கண்ணதாசா, உனக்கென ஒரு தனிநடை வகுத்துக் கொண்டாய். பாரதியைப் போல் புயல் நடையுமல்ல; கவிமணிபோல் தளிர் நடையுமல்ல; பாரதிதாசன் போல் புயலையும் தென்றலையும் சேர்த்திணைத்த நடையுமல்ல. நீயோ மாந்தளிர்க் கொய்து சாறுமாந்தும் ஒரு மாங்குயில்.
புயலும் தென்றலும் மாந்தளிரை ஆட்டிப் படைப்பதுபோல் துன்பமும் இன்பமும் உன்னை வாட்டி எடுத்தன. துன்பச் சகதியிலே நீ நிம்மதியின்றி ஊனையும் உயிரையும் உருக்கி எழுதிய இறவா கவிதைகளை நட்ட நடுநிசியில் கூட நிம்மதியாய் கேட்டு கொண்டிருக்கின்றேன்.
தத்துவம் மட்டுமல்ல காதலும் உன்னிடத்தில் நேசம் கொண்டதால்தானே சங்க இலக்கியக் காதல் ரசத்தயும் மிஞ்சி உன் காதல் கவிதைகள் காதலர் கடிதங்களில் தூது போகின்றது. தமிழின் முற்றத்திலே தங்க நிலா பிறவாகமாய் வாழ்ந்திருந்த இலக்கியச் சித்தன் நீ.
உனது வாழ்வில் சரிபாதி சபலங்களும் சஞ்சலங்களும் தாமரைத் தண்ணீரின் தத்தளிப்புகள்; மறுபாதியோ பருவம் பட்டுப் போனதாலேயே ஏற்பட்ட துன்பத்தின் சுமைகள். விலைமாதர் வீட்டிற்கும் போனதுண்டு; அருணகிரிபோல் தெய்வப் புகழ் பாடியதுமுண்டு; அரசியலில் சிலம்பம் ஆடியதுமுண்டு; அங்கு குத்தீட்டிகள் தாக்கியதுமுண்டு; பிறகு இதையெல்லாம் தாண்டி இலக்கிய முகடுகளைத் தொட்டதுமுண்டு.
காவியச் சித்தனே, வசன நடையில் புதியநடை தந்த தமிழ் இமயம் நீ; புதுக்கவிதைச் சாயலின் சந்தங்கள் பிசகாது சங்கீதத்தில் சஞ்சரிக்கச் செய்த ராஜாளிப் பறவை நீ. வாழும்போதே வரலாறான வைரமே, இளமையைச் சாகவிடாமல் இன்ப நினைவுகளோடு மானுடத்திற்கு மகுடி ஊதிச் சொல்லும் மந்திரம் உன் சொற்கூடுகலில் சுகமாகத் தேங்கி நிற்பதைப் பார்த்தால் கம்பனை உன்னுருவில் கண்டதாகத் தோன்றும்.
குற்றால அருவியாக வந்து விழுகின்ற சொற்கோவைகளை தமிழ் முத்தாரமாக தொடுத்த செட்டிநாட்டுச் சிங்கமே, உன் உணர்வின் ஊற்றிலிருந்து எழுந்து வருகின்ற செந்தமிழில் சந்தனம் மணக்கும். சந்தங்களோடு பல சங்கதிகளைச் சதிராட வைத்து கவிதைக் கலைக்கு புதுப் பள்ளியெழுச்சிப் பாடிய நாவுக்கரசனே; சிந்தாமலும் சிதறாமலும் சொல்வதில் நக்கீரனே; உன் கவிதைகள் சுகமான சொர்க்க வாசல் மட்டுமல்ல; சுந்தர புரிக்கு அழைத்துச் செல்லும் ஞானப்பனுவல்.
‘என் கவிதைகள் ஜீவிதமானவை’ எனத் தமக்குத்தாமே ‘நடுகல்’ நட்டுக் கொண்ட தெய்வீகக் கவிஞன் நீ. இறை நம்பிக்கையால் தமிழில் பல சித்துக்களைச் செய்து காட்டிய ஞானத் தச்சன் நீ. தன்னிலை உணர்ந்து திருத்திக் கொள்ள ‘போதி’ மரத்தை தேடிச் செல்ல துவங்கிய புத்தனும் நீ. 17.10.1981இல் சிக்காகோவில் தமிழ்ப் பொழிவிற்குப் பிறகு தாயகம் திரும்பாமலேயே விண்ணுலகம் சென்றுவிட்ட கலைஞனே, அன்றுமுதல் காவிரிபோல் பொங்கி வந்த புதுவண்ண பாக்கள் பொட்டிழந்து பூவிழந்து நிற்கின்றன.
‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்றெழுதிய வரிகளுக்கு நீயே அபிநயம் பிடித்துக் கொண்டு அழகு காட்டுகிறாயா?. இன்னொருவன் எப்போது இங்கே பிறப்பானோ இப்படியோர் தோற்றம் எவர்க்கினிமேல் வாய்த்திடுமோ என்ற ஏக்கத்தில் தாயைப் பிரிந்திட்ட சேய்ப் பறவையாய் தவிக்கின்றேன்.

கருத்துகள் இல்லை: