புதன், 21 ஜனவரி, 2009

நீலக்கடலோரம் ஒரு நீலக்குயிலின் நீலாம்பரிராகம்


(வாசிக்கும் முன்: பாரதியின் ‘குயில் பாட்டு’ படித்து அதன் காதற் சுவையிலே மனதை தொலைத்த என் இளமைக் காலத்தில் நான் எழுதிய எழுத்துகள் இவை. பாரதியைப்போல் நானும் கத்தும் குயிலோசைக்காக காடுமேடெல்லாம் அலைந்திருக்கின்றேன். நினைவிருக்கிறது 1986 இல் செப்டம்பர் மாத இறுதியிலே பினாங்கு(முகாயேட்) கடற்கரையோரத்தில் அமைந்த காட்டு மரமொன்றில் குயிலின் அமுதக் குரலைக் கேட்டு பாரதியின் காதல் உணர்வுப் பெற்றேன். மீண்டும் பாரதியில் முக்குளித்து 27.9.1986 நீள இரவினிலே இந்தக் கட்டுரையை எழுதினேன். என் பழைய பரணை சுத்தம் செய்தபோது கண்ணில் தட்டுப்பட்ட இந்தக் கட்டுரையை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே பதிவு செய்திருக்கின்றேன்.)

அதோ ஆர்ப்பரிக்கும் நீலக் கடலோரம் அலைகள் காயப்படுத்தியும் கட்டுக் குலையாமல் நிற்கும் அந்தக் கற்பாறை மீது அமைதியாக அமர்ந்து மீண்டும் எனது மோனத் தவம் கலைகின்றேன். அலைகளின் பேரிடிகளுக்கும் வளைந்திடாத அந்தக் கற்பாறையைப் போல் என் காதல் உள்ளமும் உடையுமேயன்றி எவராலும் வளைத்திட இயலாது..மனதில் உன் மீது கொண்ட காதல் அலைகள் உணர்வுக் கரை மோதி வழிந்தோடுகிறது.
இந்தப் பெளர்ணமி நிலா ஒளியில் பாலைவன மனத்தோடு தொலைந்து போன நமது கரைகாணா காதலின் முகவரிகளைத் தேடிக் கொண்டு இருக்கின்றேன். கரும்பே, உன் காலடிச் சுவடுகளைக் காணாததால் என் கண்மலர்கள் கண்ணீர் அரும்புகளைச் சிந்துகின்றன. நீ வாழும் நெஞ்சம் மட்டுமே நினைவுகளைத் தாலாட்டி என்னை உயிரோடு உலவவிடுகிறது.
இங்கே உன்றன் துணைத்தேடி தனியொரு சோகத் தரை மேகமாய் அலைகின்றேன். நான் கொதிக்கின்றேன் இவ்விடத்தில்; துடிதுடித்துத் தூங்காமல் போகின்றேன் இரவெல்லாம்; இவற்றையெல்லாம் ஒடிப்பட்ட சுள்ளிகளா அறியும்? அழகே, எத்தனை நாள் இப்படி ஏங்கி ஏங்கி இளத்திருப்பேன். என்புருகிப் போய் இருப்பேன் ஈடேற்றம் எந்நாளோ, உன்றன் அன்பு நிலையம் அடையும் நாள் எந்நாளோ?
பனிதூங்கும் மலரே, பண்பெனும் பயிரே, பண்ணோடு நாதம் இழைகின்றதைப்போல உன்னோடு நானும் இணைவதெப்போ? உன்றன் தேன்மதுர இதழ்ம் துடிக்கின்ற இமையும் சிலையான உடலும் சிந்தாத மொழியும் அணையென்று சொல்லி என்னை அணையென்று சொல்லி அழைப்பதெப்போ?. இன்பமே வந்துவிடு என் வாட்டம் பொக்கும் அமுதகானம் இசைத்துவிடு.
கண்ணென்ற வழியால் நெஞ்சக் கருவறையில் புகுந்து நிலைத்தவளே,நீர் பிரிந்த நிலம்போல் இங்கே நின்றன் பிரிவால் வறண்டுள்ளேன். மதுமலரையெல்லாம் மனம் வெறுத்துவிட்டது; மலர்ந்து வரும் புது இன்பமெல்லாம் கசக்கின்றது.. இதுவரையில் உன் பிரிவைத் தாங்கிக்கொண்டேன்; இனி ஒரு கணமும் தாங்காது என் இளமனது.
தாயைவிட்டு பிரிந்த சிறுபிள்ளைபோல் ஒவ்வொரு நாழியும் கலங்கி குலைகின்றேன். கார்மேகம் போல் வற்றாக் கண்ணீரைச் சொரிகின்ற நிலையில் உள்ளேன். கரையுடைத்துக் கட்டுக்கு மீறிபாயும் காட்டாற்று வெள்ளம்போல் கண்ணீர் சிந்த வைத்தல் சரிதானா சரியேதானா?. என் இதய பூமியில் சீருலாவும் தென்றலே ஓரிதயம் உனக்காக உயிர்வாதைப் படுவதும் முறைதானா முறையேதானோ?.
உன்றன் ஒளிமுகத்தை உயிரூட்டி எனைக் காக்கும் கலை முகத்தை நான் காண வேண்டும். மீண்டும் என் கண்ணிலே அக்காட்சி தன்னிலே என் இதயம் நீந்தி குளிக்க வேண்டும். என் எண்ணமெல்லாம் உன் நினைவே நிறைவதன்றி பிறிதொன்றில்லை. புதிருக்குள் சிக்கிய விடையானேன், கொதிப்புனலின் தகிப்பானேன்; நிலம் மழையால் சேறாகிப் போனதுபோல் நிறையழகே உன்னைக் கண்ட நாள்முதல் குழம்பிப் போனேன்.
நீ பிரிந்து போனாதால் முடங்கிப்போன கலையானேன்; கரையொதுங்கித் தவிக்கின்ற கப்பலானேன். கொம்பில் முழுதாகப் பழுப்பதற்குள் வீழ்ப்பழம்போல், முற்றி வந்த நம்முறவில் பேரிடி விழுந்திட நொந்தேன். இருக்கட்டும் இற்றுவிடவில்லை என் இதயம் நூலின் இழையைப்போல் அவ்வுறவைப் பேணிக் காப்பேன் என் சின்னஞ்சிறு இதயக்கூட்டில்...
பொருள் புதைந்த பார்வையால்; அடக்கத்தோடு புன்னகையால் மழைக் காலத்தின் வெள்ளம்போன்ற கலகலப்புப் புது சிரிப்பால் காதல் சிறகுகளை என்னுள் முளைக்க வைத்தாய். இன்னமுதே, இன்பக் கவிதையன்றி இலக்கியம் பூப்பதில்லை அதுபோல கனிச்சாறே, நீயின்றி நானில்லை. கவிதைப் புதையலே, உன் பேரன்பில் முகிழ்த்தெழுந்தால் பட்ட்த்துயர் எல்லாம் தீர்ந்துபோகும்.
உன் தோள் தொத்தும் பேறு நான் பெற்றால் உலகந்தன்னை ஓர் நொடியில் பெயர்த்தெடுக்கும் ஆற்றல் பிறக்கும். அகத்துறையே, உன்னிசைவின் திசை நோக்கித் தெண்டனிட்டுக் கிடக்கின்றேன். தீஞ்சுவையே, உன்னைதான் என் வாழ்வுப் பேராட்சிக்கு உயர்த் தலைவியாக்கி கீதம்பாடி நிற்பேன். என் மனம் பற்ற வரும் மட்டும் காத்திருப்பேன் குன்றம்போல் இலையெனில் தீயில் கருகியதோர் மரம் போல் பட்டுப் போவேன்.
அன்பே, நீ பிரிந்துபோன நாள்தொட்டு வெறிச்சோடிக் கிடக்கின்றேன் நன்செய் நிலம் அறுவடைக்குப் பிறகு காய்ந்து கிடப்பதுபோல. எனக்கும் ஓரிதயம் உண்டு; அதற்குள் வாடா எண்ணங்கள் ஏக்கங்கள் பல முளைப்பதுண்டு. ஓராயிரம் ஆசை அலைக்குள் சிக்கி எழுகின்ற பேரேக்கம் என்னுள் நீர்சுழலானது. கனவுக்குள்ளே கண்புதைத்து காதல் வளர்த்ததால் இதயத்தில் இன்று கனல் பூத்துவிட்டது.
‘காதலே எனக்கு நீ நன்றே செய்தாய் - துன்ப வேதனையைத் தந்து நன்றே செய்தாய்’ என்று கவி தாகூரைப் போல் நானும் புலம்பிக் கொண்டிருக்கிறேன். பேரழகே, எனக்கு வாழ்வோ எரிசூளை, இரும்பாலை ஆனதென்பேன். தெய்வீக மலர்க்கொடியே, உதிர்ந்த இறகுகளோடு இருளின் மடியில் தொலைந்து போன என் இதயத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்.
காதல் போர்க்களத்தில் என்றுமே நான்தான் நிரந்தரக் கைதி. கார்கால மேகங்களின் ஊர்கோலம் கலைந்ததுபோல் என் வண்ணக் கனவுகளில் நீந்தியவளே, நீ என் கைக்குள்ளே கிட்டிவிட்டால் உலகிற் முதல் கவிஞனாவேன். எனைவிட்டு நீ பிரிந்து சென்றாலும் உன்பால் துளிரும் அன்பை நெஞ்சில் தேக்கி நித்தம் இந்த நீலக்கடலோரம் மாதவத்தோடு காத்துக் கிடக்கின்றேன்.
இரவின் இறுகமான இருட்டில் எனது மெளனப் புலம்பல்கள் ஆன்ம வீணைகளை அழ வைக்கின்றன. உன் ஆழக் கருவிழிகளோ ஆழங்காண முடியாத இதயக் கருவறையில் இருந்து பூத்த கனவுகள் சோக சுருதி இலயத்தோடு அலைகின்ற மழையில் குளித்த மலர்கள் சிலிர்த்ததுபோல் உன் அன்பு என் சிந்தையணு ஒவ்வொன்றிலும் ஒளிருகிறது.
கவிதைப் புனலின் கற்கண்டு ஊற்றே, இன்பக் கதைகளெல்லாம் உனைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ?- அன்புத் தருவதிலே உனை நேராகுமோர் தெய்வமுண்டோ?. பேடைக் குயிலே,பெண்மைக்கே இலக்கணம் நீ, இந்த ஏழைக்குக் கிடைத்த அற்புதப் புதையல் நீ. நீலப் பூங்குயிலே, என்னுயிர் ஏகிடும் முன்னே நீ பறந்து வா என் முன்னே....

(வாசித்த பின்: இடைப்பட்ட இந்த இருபத்து மூன்றாண்டு கால இடைவெளியில் பல குயில்களை கண்டிருக்கின்றேன் ஆனால் அந்த நீலப் பூங்குயிலை மட்டும் கண்டிலேன். ஏனோ அந்தக் குயிலைக் காண இன்றும் இதயம் ஏங்குகிறது)

1 கருத்து:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

அன்பு ஐயா வணக்கம்.

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு-2 பின்வரும் வகையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

நாள்: 25-1-2009(ஞாயிறு)
நேரம்: பிற்பகல் 2.00
இடம்: தமிழியல் நடுவம், பாரிட் புந்தார், பேரா

இந்தச் சந்திப்பில் கலந்து சிறப்பிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இதன் மேல் விவரங்களை என் வலைப்பதிவில் காண்க.
http://thirutamil.blogspot.com

தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

அன்புடன்,
ஏற்பாட்டுக் குழுவின் சார்பில்,
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்