செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

நூல்களோடு ஒரு காதல்

எனது இதயம் நூல்களால் பின்னப்பட்டது. எந்த நூலைக் கண்டாலும் தாயினும் சாலப் பரிந்திடும் அன்போடு அதன் பின்னே ஓடுகிறது என்னிளமனது. நெடுங்கால வறட்சிக்குப்பின் மழை பெய்தபோது கிளர்ந்தெழும் மண்ணின் வாசத்தைப்போல இலக்கிய நூலின் வாசம் எங்கிருந்தாலும் என்னால் நுகர முடிகிறது.

பள்ளிப் பருவத்திலே நூல்களின் மேல் தீராத என் காதலுக்கு காரணமானவர்கள் நால்வர். நான் வாழ்ந்த விக்டோரியா தோட்டத்து சூழலும் அதன் அழகும் என்னுள் இயற்கையாகவே எனக்குள் ஒரு சொல்ல முடியா வாசிக்கும் பரவசத்தைத் தந்தது. தோட்டத்து மக்களும் மண்வாசனையும் என்னுள் இகசிய வாசிப்பை ஏற்படுத்தினர்.

என் தாத்தா வேதாசலத்தின் தூண்டுதலும் அவரின் கதை சொல்லும் பாங்கும் என்னுள் கற்பனை வளத்தையும் கதைகளின் மீதான ஆவலையும் அகலப்படுத்தியது. தோட்டத்து மக்களிடையே பால்வெட்டுத் தொழிலாளியானாலும் பரந்துபட்ட தமிழ் வாசிப்பைக் கொண்டவரான திரு.இராமரெட்டியைக் காணும்போதெல்லாம் எனக்குள் வாசிக்கும் ஆர்வம் ஊற்றெடுக்கும்.

அவர் பெரும்பாலும் வாசித்த நாவல்களிலிருந்து சிலவற்றை மேற்கோள் காட்டும்போதெல்லாம் அந்நூல்களை வாசிக்க மனம் ஆவலுறும். மறைமுகமாக அவரின் தூண்டுதலால் தீவிர வாசகனானேன். ரப்பர் மரம் சீவிவிட்டு ஓய்வு நேரங்களில் அவர் சாண்டில்யன்,மு.வ.,அகிலன் என எழுத்தாளர்களின் நூல்களை வாசிப்பதைக் கண்டு ரசித்திருக்கிறேன்.

அடுத்து எழுபதுகளில் என் அண்டை வீட்டுக்காரரான திரு.நடேசன் அவர்களிடம் காணப்பட்ட எனக்குப் பிடித்த பழக்கம் வாசிப்பது. அவரிடமிருந்து கல்கண்டு இதழை வாரந்தவறாமல் படிப்பது எனக்கு இனிய பழக்கமானது.

கல்லூரி காலங்களில் பெரும்பாலும் மெளனத்தின் ஆழத்திலே நான் புதையுண்டிருந்தாலும் என்னோடு இணைபிரியாமல் பேசிக்கொண்டிருந்தது நூல்களே. நா.பா,,மு.வ, அகிலன், ஜெயகாந்தன் என நாவல்களில் நீராடியதும், புதுமைப்பித்தன், மெளனி, பிச்சைமூர்த்தியென சிறுகதைகளோடு உலவியதும், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், சுரதா, அப்துல் ரகுமான், சிற்பி, மேத்தா கவிதைகளோடு கைக்குலுக்கியதும் என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்.

தமிழ் இலக்கிய நூல்களோடு இருந்த நெருக்கம்தான் என்னை உள்ளூர சுத்தப்படுத்திக் கொண்டிருந்தது. அதன் ஆனந்த பிடியிலே தொங்கிக் கொண்டுதான் ஆங்கில இலக்கியவான்களான செக்ஸ்பியர், மில்டன், ஒர்ட்ஸ்வொர்த், கீட்ஸ், பெர்னாட்ஷாவோடும் கொஞ்சம் உறவு கொண்டேன்.

என் இருபதுகளில் பெர்னாட்ஷாவின் கருத்துகள் என் வாழ்க்கையைப் பாதையைப் பெரிதும் திருப்பிப் போட்டன. அவரின் சீர்த்திருத்தக் கருத்துகளும் கிண்டலும் கேலியும் என்னுள்ளே புரட்சி விதையை ஏற்படுத்தியது. அதன் பிறகுதான் தமிழில் தந்தை பெரியாரின் சிந்தனைகளைப் படித்தேன். அமைதியாக நீருபூத்த நெருப்பு என்னுள்ளே வளர்ந்தது.

ஆங்கிலத்தில் தழுவல்களாக வெளியான ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மனதை இளகச் செய்தது. பாலைவன கவியரசன் கலீல் ஜிப்ரானின் ‘ப்ரொபெட்’ எதிர்பாரதவிதமாக தொட்டதும் என்னுள்ள பள்ளத்தாக்கிலும் கவிப்பூக்கள் மொட்டவிழத் தொடங்கின.

மலாய் இலக்கியவாதிகளான சானோன் அமாட்டின் ‘ரஞ்சாவ் செபான்ஞ்சாங் ஜாலான்’, சமாட் சைட்டின் ‘சலீனா’, இந்தோனேசிய நாவலான ‘கெலுவார்கா கெரில்யா’எனக்குள் மொழிபேதத்தைத் களைந்து மனிதத்தைக் காட்டின. கிரிஸ் மாஸின் ‘கே மாக்காம் பொண்டா’வையும் சைரில் அன்வாரின் ‘புரோங் புஜாங்கா’வையும் வாசிக்கையில் கவிதைகளில் மனித உணர்வையுந் தாண்டிய உயிர்களின் பொதுமைப் பண்பு தெரிந்தது.

இன்றைய எஸ்.ராமகிருஷ்ணன், இறையன்பு, சுகி சிவம் ஆகியோரின் வாழ்வியல் கட்டுரைகளில் தனிக் காதலுண்டு. வாழ்வின் நம்மால் கவனிக்கப்படாத எத்தனையோ ரகசியக் கதவுகளை திறந்து காட்டியிருக்கிறார்கள். என்றுமே ஓஷோவின் கருத்துகளுக்கு என்னுள் தனியிடம் உண்டு. ஓஷோவைப் படித்தப் பிறகுதான் வாழ்க்கையின் சின்னஞ்சிறு நிகழ்வுகளையும் ஆழப் பார்க்கும் பார்வை பிறந்தது. சமூக நடப்புகளிலிருந்து மெல்ல என்னை விடுவித்து கொண்டு சுதந்திர பறவையாய் சிறகு விரிக்க நினைக்கிறேன்.

என் வாழ்க்கை வழியெங்கும் நான் தொட்ட புத்தகங்களெல்லாம் என்னைக் கேட்காமலேயே என்னைச் செதுக்கின. கல்லூரியெனும் பத்தக மூங்கில் காட்டுக்குள் என்னைத் தொலைத்தேன். இலக்கியத் தாகத்தால் எந்த வழிகாட்டலும் மேய்ப்பனுமின்றி தனியே என் பயணம் இன்றும் தொடர்கிறது. இன்னும்கூட ‘மோகமுள்ளின்’ வலியும் ‘மரப்பசுவின்’ உரசலும் ‘விஷ்ணுபுரத்தின்’ விளைச்சலும் இதயத்துள் விரிகின்றது.

ஜெ.ஜெ.குறிப்புகளுக்குப் பிறகு சுந்தர ராமசாமியை நானும் நண்பர் மணிமாறனும் அவர் இல்லத்துக்கே தேடிச் சென்று சந்தித்துக் கலந்துரையாடியது மறக்கவியலாது. இன்றைய ஜெயமோகன், வண்ண நிலவன், நாஞ்சில் நாடன், என வாசிப்பு விரிந்து சென்றாலும் எனக்குள் நானே விமர்சனம் செய்த எத்தனையோ இலக்கியப் படைப்புகள் கனவிலும் கல்லெறிந்து கொண்டிருக்கிறன.

தமிழில் அறம் பாடிய வள்ளுவன் தொடங்கி மறம் பாடிய பாரதிவரை ஒவ்வொரு வரியாக வாசித்து சிலாகிக்க மனம் ஏங்குகிறது. சங்கத் தமிழும் பக்தி பதிகமும் சல்லடையாய் அலச அறிவு துடிக்கிறது. ஒவ்வொரு நாளும் இலக்கிய இன்பத்திலே கரைவதற்கு இதயம் தவிக்கிறது. ஒரு கோப்பைத் தேநீரோடு இலக்கிய அமுதம் பருக என்னோடு இன்னொருவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

கருத்துகள் இல்லை: