செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

தாவரங்களோடு ஒரு தவம்

என் மனத்துக்குள்ளே செடி, கொடி, தளிர், மலர் மரமென முழுவதும் விரிந்து கிடக்கிறது ஓர் இரகசிய உலகம். அந்த மனித ஓசைகளற்ற உலகத்தில் மரங்கள் பேசும் மொழியில் ஒரு தெய்விகம் ஒளிருகிறது.

ஒரு விதையானது மண்ணிலிருந்து கிளர்த்தெழுந்து முளைவிட்டு, இலைவிட்டு, கிளைவிட்டு, பூவிட்டு, காய்விட்டு, கனிவிட்டு தன்னையே ஈந்து பட்டுபோகும் ஒவ்வொரு தாவரத்திலும் ஒரு மனிதனை தரிசிக்கின்றேன்.

நெடுந்தூர வாழ்க்கைப் பயணத்திற்குப் பிறகும் என்னை உற்சாகமாகவும் உயிர்த் துடிப்பாகவும் வாழ வைத்துக் கொண்டிருப்பது என் தாவர தோழர்களே. கண்ணைமூடி நான் அமரும்போதெல்லாம் என் முன்னே விரிந்தாடும் மறைந்துபோன மரங்கள் சிலநூறு; மனித மூர்க்கத்தால் பலவாறு அழிந்த மரங்கள் பலநூறு.

சின்னஞ் சிறு வயதில் நான் பார்த்த மரங்கள் இன்னும் பசுமையாய் என்னுள் வளர்ந்து கொண்டிருக்கிறன. அவை எத்தனையோ மனித காயம்பட்டு இன்று காணாமல் போனாலும் என்னுள்ளே நித்தம் நீரூற்றி வளர்க்கப்பட்டே வருகின்றன.

என் பாட்டியும் தாத்தாவும் காட்டிய வேலம், கல்யாண முருங்கை, நொச்சி, எருக்கம், வில்வ, புன்னை, ஆவாரம், ஆலம், அரச, புளிய, வேப்ப மரங்களைக் காண்கையில் இனம்புரியாத நேசம் நெஞ்சில் பூக்கிறது.

எத்தனையோ மரங்கள் இருந்த இடம் இன்று மனை மாடியென உருமாறி போயிருந்தாலும் அங்கே செல்லும்போதெல்லாம் எனக்குள் உறவைப் பிரிந்த சோகம் இதயத்தில் வலிக்கிறது. பெரும்பாலும் அந்த மரங்கள் வாழ்ந்த மண்ணை வாஞ்சையோடு தொடும்போது அதன் இளஞ்சூட்டை உள்ளூர உணர்கின்றேன்.

மண்ணை இதயத்தோடு அணைக்கையில் மறைந்துபோன மரத்தின் வாழ்ந்ததற்கான ஓசை சுவடுகள் மெல்லியதாய்க் கேட்கும். மரத்தின் வேர்பிஞ்சுக்கால்கள் உறைகளாக அணிந்த புதைந்த மண்ணின் வாசம் என்னால் நுகர முடிகிறது.

இன்றும் கூட நான் எந்தெந்த மரம் எங்கெங்கு வாழ்ந்தது இருந்தது என நண்பர்களிடம் கூறும்போது என்னை ஒரு மாதிரியாகவே பார்ப்பார்கள். என் பால்ய பருவத்திலே நான் வாழ்ந்த தோட்டத்து முழுமைக்கும் இருந்த தென்னை மரங்களின் எண்ணிக்கை அறுபத்து ஏழு. ஒவ்வொரு மரமும் நின்ற இடமும் தன்மையும் என்னுள் நிலையாக உள்ளன.

தோட்டத்து எல்லா மனிதர்களின் பெயர்களும் அவர்களின் இயல்புகளும் வாழ்ந்த வீடும் நினைவில் இருப்பதைப் போல எல்லா மரங்களும் அதன் மீதுள்ள அடையாளங்களும் மனிதன் ஏற்படுத்தியக் காயங்களும் நானறிவேன்.

நிழல் மரம் எனும் பொதுப்பெயரில் தோட்டத்து கீழ்ப்புற மையத்தில் ஒன்றும் தோட்டப் பள்ளியின் நடுவிலே ஒன்றும் மேல்புறத்தில் மாட்டுக் கொட்டகையின் ஓரம் ஒன்றும் அழகு சேர்த்தன. தோட்டத்தில் சிறுவர்களின் குண்டு விளையாடுதலின் சீண்டுதலில் சிலிர்த்துப்போகும் வேப்ப மரங்கள். பெரியவர்கள் கால்விரித்து கலந்துரையாட குடைப்பிடித்த கிழக்கு புளியமரம். பருவக் காலங்களில் பழங்களால் பூத்துக் குலுங்கி கற்களால் காயம்பட்டழும் ரம்புத்தான் மரங்கள்.

மாட்டுத் தொழுவத்தின் ஓரங்களில் வெளிறிய தோலோடு நின்ற ஐந்து கொய்யாமரங்கள் எங்களுக்கு ஊட்டச்சத்து தந்த தாய்கள். மலக்கூடங்களின் அருகில் செழித்து நின்ற பப்பாளி மரங்கள் பழங்கள் மட்டும் தந்தன?. எங்களின் சோப்புக் குமிழ்ப் போட்டிகளுக்கு காம்பையும் அல்லவா தாரை வார்த்தன.

தோட்ட கிராணியார் வாழும் மேட்டுப் புறங்களில் பூக்களே இலைகளாய் வீற்றிருக்கும் கொம்புகளடர்ந்த மூன்று மரக்கிளைகளில் சஞ்சாரம் செய்ததை மறக்க முடியாது. பட்டம்விடும் காலங்களில் அந்த மரத்தடிகள்தான் எங்கள் போதி மரங்கள்.

எந்ததெந்த பறவை எந்தெந்த மரத்திற்குச் சொந்தம் என்ற கணக்கெடுப்பும் என்னிடம் உள்ளது. மைனாக்களின் ஆலாபனையில் கிணற்றோரம் கண்துயிலும் ஏழு தென்னைமரங்களும், புறாக்களின் அழகிலே அசைந்தாடும் அகத்தீ மரமும், கடையோரத்தில் நிற்கும் முந்திரி பழத்துக்காக காத்திருக்கும் சிறுவர்களோடு போட்டிபோடும் காகங்களும், மரங்கொத்தி, மீன்கொத்திகளோடு பெயர் தெரியாத எத்தனையோ வண்ணப் பறவைகள் தங்கிச் செல்லும் ஆலயமாக விளங்கும் நெடிதுயர்ந்த டுரியான் பழ மரங்களும் தோட்டத்தையே வனப்போடு வைத்திருந்தன.

ஒதுக்குப்புறமாக நின்ற புளியமரம் பெரியவர்களால் காவல் தெய்வம் குடிகொண்டிருக்கும் இடமென பயமுறுத்தப்பட்டாலும் உச்சி வேளையைத் தவிர பிற பொழுதுகளில் சிறுவர்கள் விளையாட பயந்ததாக ஞாபகமில்லை.

தோட்டத்து மயான எல்லையில் நிற்கும் நடுகாட்டன் மரம் அவ்வளவு பெரியது இல்லையென்றாலும் அதைக் கடந்து போகும்போதெல்லாம் இறந்துபோனவர்கள் வெள்ளுடையிலே தொங்குவது போன்ற அம்புலி மாமா விக்கிரமாதித்தன் பேய்கள்தான் நினைவில் வரும்.

தோட்டத்து காதல் சின்னங்கள் பதிவான சில மரங்கள் இன்னும் நினைவில் இருக்கிறது. முனியாண்டி கோயில் பக்கத்தில் நின்ற நெல்லி மரத்தில் மேல் கிளையில் ‘கண்ணு-சரோ’ காதலும் குப்பைக் மேட்டருகில் முளைத்த கள்ளி செடியின் மீது பால்வழியும் பல்வித காதல் குறியீடுகளும் காவிய வலிவுடையவை. எத்தனையோ காதல் மொழிகளில் இன்னும் அடையாளம் காணமுடியாமல் நான் இருப்பது ‘மனோ- திமா’ என்ற கல்லறை இலையைத்தான்.

தேன்சிட்டு பறவைகள் வட்டமிடும் சூசைமரங்களின் நிழலில் தங்கிச் செல்லும் ஆசை இன்றும் எனக்குண்டு. டப்பா பழச் செடிகளைக் கேட்காமலே பறித்து தின்னும் ஆசைகளும், குவளை மலர்களின் கொடிகளைத் தழுவும் சுகமும், தொட்டாற் சிணுங்கிகளின் பொய்க் கோபமும், ஒட்டுப் புற்களின் உதிராத நட்பும், கோரைப் புற்களின் சிலிர்த்த அழகும், அந்தி மந்தாரை, பவலவல்லி, மல்லிகை, செம்பருத்தி போன்ற வண்ண வண்ணப் பூச்செடிகளின் அணிவகுப்பும் என்றும் இனிக்கும் வசிகரமுடையன.

வாழை மரக் குறுத்து இலைகளின் இளம்பச்சைகளின் மேல் என்றுமே எனக்கு மயக்கமுண்டு. வாழையிலைகளின் வாசமும் அதன் விரிந்த இலைகளிலே உருண்டோடும் மழைத்துளிகளைக் காண்பதும் தனிசுகம். தோட்டத்து ஒதுக்குப்புறத்தில் வளைந்தோடும் ஆற்றங்கரை மேடுகளில் தோகை விரித்தாடும் மூங்கில் புதர்களில் நெஞ்சம் பறிகொடுத்திருக்கிறேன்.

புலராத காலைப் பொழுதின் பனித்துளிகள் மூங்கிலின் மெல்லிய இலைகளில் ஊஞ்சலாடுவதை கண் மாறாமல் பார்க்க பிடிக்கும். அந்தத் உணர்வுதான் இன்றும்கூட என் வீட்டு சுற்றுப்புறத்தில் மூங்கில் நட்டு வைத்திருக்கிறேன்.

மாலை நேர பறவைகள் கீச்சல்களோடு வந்தமரும் தென்னை இளங்கீற்றுகளை ஏக்கத்தோடு பார்ப்பேன். தென்னை ஓலையை குழந்தையின் அன்போடு அணைப்பது இன்றுவரை தொடர்கிறது. ரப்பர் மரக்காடுகளில் மகிழ்ச்சியோடு பயணம் போவதில் எனக்கு பெருமகிழ்ச்சி.

இலையுதிர் காலங்களில் மரக்கிளைகளிலிருந்து உதிரும் இலைகள் பூமியைத் தொடும் வரை அதோடு பறந்தது எத்துணை இன்பம். ரப்பர் இலைகள் துளிர்விடும் காலங்களில் மஞ்சள் நிற செந்தூர மகரந்த துகள்களின் மணம் இன்றும் என்னுள்ளே மணக்கிறது. என் அப்பா இறந்துவிட்ட நிலையில் அவர் வளர்த்த வெற்றிலைக் கொடிகளைப் பார்க்கும்போதெல்லாம் ஒவ்வொரு புது இலை துளிரிலும் அவரின் முகம் தெரிகிறது. அவரது கைப்பட்டு வளர்ந்த அந்த வெற்றிலை செடிகளைத் தொடும்போது அவரைத் தொடும் சுகம் பிறக்கிறது.

என் வயதோடு வளர்ந்த மரங்களைக் காணும்போது என் வளர்ச்சியைக் காண்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அந்த மரங்களோடு எனது தோழமையும் தொடர்கதையாய் செல்கிறது. இன்றும் என் வீட்டைச் சுற்றிலும் உறவுகளாக விரிந்திருப்பது மரஞ்செடி கொடிகள்தான். ஒவ்வொரு காலையும் அந்தச் செடிகளின் முகங்களில் விழிப்பது இன்பம். என் குழந்தைகளுக்கு சகோதரர்கள் நான் வளர்க்கும் செடிகளே.

என் வீட்டில் வளரும் மரஞ்செடி கொடிகளுக்கு தனிச்சிறப்புண்டு. ஒவ்வொரு செடிகொடிக்கும் என்னோடு தோட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் பெயரை வைத்துள்ளேன். என் குழந்தைகளுக்கு அந்த மனிதர்களின் பெயரையும் அவர்களின் பண்பு இயல்புகளையும் சொல்லியே செடிகொடிகளை அறிமுகப்படுத்தியுள்ளேன். ஒவ்வொரு மாலைப் பொழுதும் நீரூற்றும் வேளையில் அச்செடிகளோடு கந்துரையாடுவதும் அன்பொழுக அணைப்பதும் இனிதே நடக்கிறது.

வீட்டின் முன்னே கிளை பரப்பி நிற்கும் நெல்லி மரத்திற்கு என் பாட்டி ஆதிலெட்சுமியின் பெயரும் மூங்கில் செடிக்கு தாத்தா வேதாசலத்தின் பெயரும் மூக்காயி, பொன்னம்மா, சின்னையா, பலராம் பாரதி, ஒளவை, வள்ளுவன் என என் வீட்டு எல்லாத் தாவரங்களுக்கும் பெயருண்டு. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் அவர்களோடு நானும் குழந்தைகளும் பேசுவோம். நீரூற்றுவது, மண் அணைப்பது, களை நீக்குவது என அந்தத் தாவர மனிதர்களோடு இன்பமாக வாழ்கிறோம்.

நான் பணிசெய்யும் இடத்தும் என்னோடு ஒரு செடியை பல ஆண்டுகளாக வளர்த்து வருகிறேன். நான் தினமும் அச்செடியோடு பேசுவதும் அன்பு கொள்வதும் எனை மீண்டும் உணர்வால் புதுப்பிக்கின்றது. ஒரு ரகசியம் சொல்லட்டுமா?. என்றோ படித்த ‘போஸ்’ என்பவரின் தாவர ஆராய்ச்சி. நீங்கள் வெளியூர் சென்று திரும்பும்போது உங்களின் வருகையை முதலில் அறிவதும் உணர்வதும் ஆனந்தப்படுவதும் உங்கள் வீட்டு தோட்டத்துத் தாவரங்களே. அவைக்குப் பிறகுதான் நீங்கள் வளர்க்கும் செல்ல நாய், பூனை, மீன் எல்லாம். இறுதியாக உங்களை வரவேற்பதுதான் உறவுகள்.

நினைவில் நிறுத்துங்கள், உங்களுக்கு உடம்பில் காயம் பட்டால் முதலில் உங்களுக்காக கலங்குவதும் வருந்துவதும் துடிப்பதும் தாவரங்களே. உணர்வுப்பூவமாக சொல்கிறேன் தாவரங்களோடு நேரம் ஒதுக்கி உரையாடிப் பாருங்கள், வாழ்க்கையைப் பற்றி ஆயிரம் புரிதல்களைச் சொல்லும். மலர்கள் மெல்ல மொட்டவிழும் மெல்லோசை செவிமடல்களில் தேனாக பாயும். மழையில் இலைகள் நனைந்த ஆனந்த சிலிர்ப்பு உங்கள் கண்களுக்குத் தெரியும். என்றேனும் ஒரு நாள் சில மணித்துளிகளாவது ஏதாவதொரு தாவரமாய் உங்களை நீங்கள் உருவகித்து வாழ்ந்து பார்த்திருக்கிறீர்களா?. உங்கள் மீது இலைகளும், கிளைகளும், மலர்களும், காய்களும், கனிகளும் முளைப்பதை கவனித்துப் பாருங்கள். அந்தச் சுகானுபவத்திற்காக இன்னும் பல பிறப்புகள் தாவரங்களாய் பிறக்கலாம்.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

taavarangkaLodu iyainthu vaazhnthullirkaL. ennudaiya paalya kaalathil taavarangkalodu uravadiya ninaivukal nenjile uunjalaadukinRana..

பெயரில்லா சொன்னது…

ungalai pol thavarathai penupavargal irunthal kandipage indru nam ulagathin veppam uyartirukathu...

கவிவர்மன் சொன்னது…

வணக்கம் ஐயா.
தாவரங்களோடு ஒரு தவம் மிகவும் என்னைக் கவர்ந்து விட்டது.இதுவரை தாவரங்களை சாதாரண ஜீவராசி என்றும் உணர்ச்சிகள் இல்லாத ஒரு பொருள் என்றும் எண்ணி இருந்தேன்.தங்களின் கருத்தைப் படித்தவுடன் என் எண்ணம் எவ்வளவு தவறு என்று உணர்ந்து விட்டேன்.தாவரங்களை உற்ற‌ தோழ‌னாக‌வும் க‌ட‌வுளின் பாதியாக‌வும் நினைக்கும் அள‌வுக்கு உங்க‌ளின் க‌ருத்து என்னை ஆட்கொண்டு விட்ட‌து.
அன்று வ‌குப்பில்,ந‌ம‌து வாழ்வில் யாரோ ஒருவ‌ர் ம‌ன‌த‌ள‌வில் தொடுத‌லை ஏற்ப‌டுத்தி மாறுத‌லை ஏற்ப‌டுத்துவார் என்றீர்க‌ள்.என‌து வாழ்விலும் த‌ன்ன‌ம்பிக்கையிலும் எண்ணங்களிலும் பெரிய‌ மாறுத‌லை ஏற்ப‌டுத்தியவ‌ர் தாங்க‌ள்தான்.இதுவ‌ரை,பிற‌ந்தோம் உண்டோம் வாழ்ந்தோம் என்று இருந்துவிட்டேன்.ஆனால்,வாழ்க்கையை இப்ப‌டிதான் வாழ‌ வேண்டும் என்று த‌ங்க‌ளைப் பார்த்து தெரிந்து கொண்டேன்.இது வெறும் வாய் வார்த்தை ம‌ட்டும் அல்ல‌.என் உள்ள‌த்தின் வெளிப்பாடுக‌ள்.

ந‌ன்றி,
த‌ங்க‌ள் மாண‌வி
சு.தீபா
(PT-3J)