திங்கள், 16 மார்ச், 2009

தித்திக்கும் தொல்காப்பியம்

தொல்காப்பியம்

‘தமிழ் முதனூல்’ என்று போற்றப்படும் தொல்காப்பியம் பண்டைத் தமிழ் இலக்கண நூல்களுள் மிகப் பழமையும் முதன்மையையும் பெற்றதாகும்.

ஒல்காப்புகழ் தொல்காப்பியம் இன்று நேற்று தோன்றிய நூலல்ல. ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்ததென்று மொழியியலர் சான்று பகர்கின்றனர். என்ன வியப்பு ஏற்படுகிறதா?. மூவாயிரம் அகவையுடைய தொல்காப்பியமே மிகச் செறிவாக இருப்பதனால் நமது தமிழ் அதற்குப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கண இலக்கிய வளமிகுந்த மொழியாய்ச் சிறப்புற்றிருத்தல் வேண்டும் என்பர் நற்றமிழறிஞர்.

தொல்காப்பியரை நினைத்தால் மிகப் பெருமையாக உள்ளது. அவர் தம்மினும் முன்னோரை உயர்மொழிப் புலவர், யாப்பறி புலவர், நுணங்குமொழிப் புலவர், நூனவில் புலவர், சொல்லியற் புலவர், தொன்னெறிப் புலவர் என உவகைப் பொங்க நன்றி பாராட்டுதல் போற்றத்தக்கது.

“இன்று நமக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்களுள் தொல்காப்பியமே தமிழர் வாழ்வின் பலதுறை பற்றி அறிவதற்குத் துணை புரிவதாகும். இதனைத் தமிழ்ப் புலவர் மட்டுமே தேர்வு கருதிக் கற்று வருகின்றனர். இஃது இலக்கண நூல்தான் என்றாலும், ஏனைய மொழிகளிலுள்ள இலக்கண நூல் போன்றதன்று; அண்மை நூற்றாண்டில் தோன்றி வளர்ந்து வரும் மொழியாராய்ச்சியும், இலக்கிய ஆராய்ச்சியும், பண்பாட்டுக் கலைகளாம் உயிரியல், உளவியல், வாழ்வியல் முதலியனவும் தன்னகத்தே கொண்டு இலங்குகின்றது.” டாக்டர் சி.இலக்குவனார்

தொல்காப்பியம் தமிழ் மொழியின் இயல்பை உள்ளவாறு ஆராய்ந்து விளக்குவது; பேச்சு வழக்கையும் செய்யுள் வழக்கையும் அடிப்படையாகக் கொண்டிலங்குவது. அதற்குச் சான்றாக விளங்குவது கீழ்க்கண்ட சிறப்புப்பயிரம் வரிகள் உணர்த்துகின்றன.

“தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி “

தொல்காப்பியத்தை நாம் மொழி விளக்கவியல் நூலாகவே கொள்ளலாம். தொல்காப்பியம், தொல்காப்பியர் காலத்து மொழி நிலையையும் அதன் முந்திய நிலையையும் ஓரளவு உணர்த்துகிறது. அதில் பயன்படுத்தப்பட்ட மொழி நூலின் விதிகளை ஒட்டியே பெரிதும் இலங்குவதால் அதனைக்கொண்டு மொழியின் பொதுவியலையும் ஓரளவு அறியவியலுகிறது.

மூவாயிரம் ஆண்டுகள் பழமையுடையதாயினும், இன்றும் தொல்காப்பியத்தின் ஆட்சி தமிழ்மொழியில் பெரும் பகுதி நிலைத்து நிற்கிறது. தொல்காப்பியர் ஆழ்ந்து சிந்தித்துத் தமிழின் அடிப்படையான இலக்கணக் கூறுகளையெல்லாம், முன்னோர் வழிநின்று, தொகுத்துத் தந்திருப்பதால் தமிழுக்கு நிலைபேறான காப்பு நூலாக விளங்கி வந்திருக்கின்றது.

எத்தனையோ இலக்கிய இலக்கண நூல்கள் இடைப்பட்ட காலத்தில் தோன்றி மறைந்திருந்தாலும் இந்நூல் சிதைவு பெறாமல் வழிவழியாகப் போற்றிக் காக்கப்பட்டு இன்று நம் கைக்கு முழுமையாக கிடைத்திருப்பதே இதற்கு பெரும் சான்றாகும் என்கிறார் தமிழண்ணல்.

தமிழரின் பழைய வாழ்க்கை மரபுகள், நூல்மரபுகள் யாவற்றையும் பிற்பட்ட காலத்தவர்க்குக் கொண்டு சேர்த்த பெருமை இந்நூலுக்கே உண்டு. தொல்காப்பியம், இவ்வகையில் தமிழ் இலக்கியம் இலக்கணம் தமிழர் வாழ்க்கைப் பண்பாடுகள் யாவற்றிலும் கொண்டு செலுத்திய செல்வாக்கு வேறு உலகநூல் எதனினும் காணப்படாத ஒன்றாகும்.

தொல்கப்பியர் காலத்தில் ‘நூல்’ என்றால் . அஃது இலக்கண நூல் ஒன்றையே குறிக்கும். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என முப்பெரும் பிரிவுகளை உடையது.

எழுத்து என்ற பிரிவில் தனிநின்ற எழுத்து, சொல்லிடை வரும்போது அவ்வெழுத்தின் நிலை, எழுத்துகளின் உச்சரிப்பு நிலை, சொற்களில் எழுத்துகள் தொடர்ந்து நிற்கும் நிலைகள், சொற்கள் புணரும்போது ஏற்படும் எழுத்து மாற்றங்கள் ஆகியன கூறப்படுகின்றன.

சொல் பற்றிய பெரும் பிரிவில் சொற்கள் தொடர்ந்து தொடர்களாக அமையும் முறை, தமிழுக்குச் சிறப்பாக அமையும் அல்வழி வேற்றுமைத் தொடரிலக்கணம், தனிச்சொற்களின் இலக்கணம் ஆகியவை பேசப்படுகின்றன.

பொருள் இலக்கணம் இலக்கிய ஆக்கம் பற்றியது. மக்கள் வாழ்வு எங்ஙனம் இலக்கியமாகப் படைக்கப்படுகிறது என்பதே இதில் விளக்கப்படுகிறது. இது தமிழில் மட்டுமே காணப்படும் தனிச்சிறப்புடைய பகுதியாகும். இப்போது நன்கு புரிந்திருக்குமே நமது தொல்காப்பியத்தின் சிறப்பு எத்துணை பெரிதென்று.

தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் தமிழில் பலப்பல இலக்கண நூல்கள் தோன்றின. தமிழ் இலக்கண வரலாறு ஒன்று விரிவாக எழுதக்கூடிய வகையில் தமிழில் இலக்கண நூல்கள் காலந்தோறும் தோன்றின.

முதலாவதாக ஐந்திலக்கண நூல்களைக் குறிப்பிடலாம். அவை முறையே வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம், சுவாமிநாதம். இவற்றுள் ஒரு சில வடநூல் மரபிற்கு ஆட்பட்டு இலக்கணங் கூறினாலும் தொல்காப்பிய மரபே நிலைபெறுவதாயிற்று.

யாப்பிலக்கணம் சார்ந்து தோன்றியவற்றில் குறிப்பிடத்தக்கவை யாப்பருங்கலமும் யாப்பருங்கலக் காரிகையும் ஆகும். அவிநயம், காக்கைபாடினியம் என முற்பட்டனவாயும்; யாப்பிலக்கணம், சிதம்பர செய்யுட்கோவை, மாறன் பாப்பானினம், பல்சந்தப் பரிமளம், திருவலங்கல் திரட்டு, விருத்தப்பாவியல் எனப் பிற்காலத்தும் தோன்றிய யாப்பிலக்கண நூல்கள் மிகப்பலவாகும்.

தண்டியலங்காரம், மாறனலங்காரம், அணி இலக்கணம் போலும் தமிழ் அலங்கார நூல்களில் வடமொழிச் செல்வாக்கு மிகுதி எனினும் கூர்ந்து நோக்குவார்க்கு அவற்றிலுள்ள தமிழ் அடிப்படைகளும் தெள்ளிதின் விளங்கும்.

நேமிநாதமும் நன்னூலும் எழுத்து, சொல் பற்றித் தனியே இலக்கணங்கூறுவன. இலக்கணக்கொத்து சொல்லிலக்கணம் பற்றியது. இறையனார் களவியல், நம்பியகப் பொருள், தமிழ்நெறி விளக்கம், களவியற் காரிகை, மாறனகப் பொருள் என்பன அகம் பற்றியும் பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை என்பன புறப்பொருள் பற்றியும் தோன்றியனவாகும்.

நன்னூல் தொல்காப்பியத்தின் வழிநூலாகும். இதனைப் பழையனவற்றை ஓரளவு கழித்துப் புதிய வழக்குகளைப் புகுத்தித் தன் காலத்து நிலையை விளக்கும் மொழிவிளக்க நூல் எனலாம். நன்னூல் பொதுப்பாயிரம் சிறப்புப்பாயிரம் என இரண்டு வகையான பாயிரங்களைக் கொண்டிலங்குகின்றது.

நன்னூல் எழுத்ததிகாரம் , சொல்லதிகாரம் என்று இரண்டு அதிகாரங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றிலும் ஐந்து இயல்கள் உள்ளன. இதனை இயற்றிய பவணந்தி முனிவர் வடமொழியினையொட்டி பதவியல் என ஓர் இயலைப் புகுத்தியுள்ளார். நன்னூல், பிற்காலத்துக் கருத்துகளை ஏற்றுப் புதுவிதிகள் சொல்லுவதைப் பலவிடங்களில் காணலாம்.

தற்போது மேலைநாட்டார் கண்ட மொழியியலை நம் முன்னோர்கள் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே கண்டு சிறந்த முடிவுகளைக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு மேற்கண்ட இலக்கண நூல்கள் செவ்விய சான்றுகளாகின்றன.

தொல்காப்பியத்திற்கு ஈடு சொல்லக்கூடிய அளவிற்கு வேறு சிறந்த மொழியியல் விளக்க நூல் இன்றளவும் பிற மொழியிலில்லை என்று துணிந்து கூறலாம். இன்று பல்கிப் பெருகிவரும் மேலைநாட்டாரின் புதுக்கருத்துகளோடு தொல்காப்பியம் பெரிதும் ஒத்து இயங்குகிறது; தமிழின் இயலை நன்கு விளக்குகிறது.


தமிழ்மொழியின் தோற்றம் மிகத் தொன்மையானது. கடற்கோளால் முதற்சங்கம் தோன்றிய குமரிக் கண்டமும், இடைச்சங்கம் தோன்றிய கபாடபுரமும், கடைச்சங்கம் தோன்றிய மதுரையும் அழிந்தன என சான்றுகளைக் கண்டோம்.

என்றுமுள தென்தமிழாய் பல்லோரலும் இன்றளவும் போற்றப்பட்டு வருகிறது நம் தமிழ்மொழி. தமிழில் பேச்சு வழக்குகள் காலத்திற்கேற்ப மாற்றம் கண்டு வந்தாலும் அடிப்படைத் தமிழ்மொழியானது நிலைபெற்று இருக்கிறது. இனி வரும் எத்துணைக் காலமும் தொல்காப்பியமும் நன்னூலும் தமிழ்மொழிக்கு அடிப்படையாகவே விளங்கும்.

2 கருத்துகள்:

கிருஷ்ணா சொன்னது…

திருமந்திரம் எண்ணாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று படித்திருக்கிறேன். அப்படியென்றால்.. தமிழ் மொழி.. அதைவிட பல ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக இருக்க வேண்டும்! இல்லையா?

thiyagarajan சொன்னது…

mikavum nalla katturai.

Dr.S.thiyagarajan.Ph.D.