திங்கள், 16 ஜூலை, 2012

தமி்ழால் முடியும்

தமிழ் சங்க காலத்திற்கு முன்பும் பின்பும் சுவடிகளில் படைப்புகள் பலவற்றுக்கு உரையாசிரியர்கள் உரைகண்டனர். அப்போதும் அதற்குப் பின்னர் காகித அச்சு தொழில் நுட்பத்திற்கு மாறிடும் போதும் அதன் வரி வடிவங்கள் சிற்சில மாற்றம் கண்டன. இவ்வாறு மாற்றம் கண்டிடினும், அதன் வளமை மாறவில்லை. இது தமிழின் சிறப்பாகும். அதே போல் அச்சுருக்களிலும் காலத்துக்கேற்ப மாறுதல்கள் வந்த போதும் அந்த மாற்றங்களுக்கும் தமிழ் உட்பட்டது. அச்சுக்கலையின் வேகமான பல்வேறு மாற்றங்களுக்கும் தமிழ் உட்பட்டது. இதேபோல் கணித்தொழில் நுட்பம் தொடங்கிய போதும் அதில் ஏற்பட்டு வரும் பல மாற்றங்களிலும் தமிழ் தன் தனித்தன்மையை இழக்காமல் அத்துணை மாற்றங்களையும் எதிர்கொண்டு காலங்கள் தோறும் நிகழ்ந்த மாற்றங்களை உள்வாங்கி தனித்தன்மையுடன் மிளிர்கிறது. ஆங்கிலம் மற்றும் பிரென்ச் மொழிகளில் புதிய தொழில் நுட்ப அறிவியல் துறைகள் உருவான போது புதிய புதிய சொற்கள் உருவாயின. உலக மொழிகள் பலவும் ஆங்கிலம் பிரென்ச் சொல் வடிவங்களை அப்படியே ஏற்றது. ஏனெனில் அவைகளுக்கு புதிய சொல்லாக்கம் செய்திடும் வண்ணம் மொழி வளம் குறைவு. ஆனால் தமிழ் வேர்ச்சொல் அடிப்படையிலும் வினைகளின் அடிப்படையிலும் புதிதாக உருவான சொல்லுக்கு நிகரான சொற்களை உருவாக்கும் திண்மை பெற்றதால் தன் தனித்தன்மையை நிலை பெற வைத்துள்ளது. காட்டாக ஜப்பானியர்கள் தொலைக்காட்சி தொழில் நுட்பத்தில் மேற்குலகையே ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகின்றனர். எனினும் ஆங்கில சொல்லான டெலிவிஷன் என்ற சொல்லுக்கு மாற்றாக அக்கருவியை ஜப்பான் மொழியில் வழங்க இயல்வில்லை. எனவே அவர்களும் டெலிவிஷன் என்றே வழங்குகின்றனர். ஆனால் டெலிவிஷன் எனும் கருவி புரியும் வினையை தமிழில் உட்கிடத்தி அதனை தொலைக்காட்சி என வழங்குகிறோம். இதுவே மொழிச் சிறப்பு. தமிழில் வழங்கப்பட்டு வரும் சொற்களாயினும் புதிய சொல் ஆக்கம் எதுவாயினும் இயற்கை - ஆக்கம் - செயற்கை என உருவாக்கிட தொல்காப்பியத்தின் சொல் அதிகாரம் தெளிவைத் தருகிறது. இது தமிழுக்கே உரித்தானதாகும். எனவே தான் இன்று வளர்ந்து வரும் எத்தகைய புதிய துறையாக இருப்பினும் அதற்கான சொல்லாக்கம் தமிழால் செய்ய இயலும். மனித அறிவின் எல்லையற்ற வளர்ச்சிக்கு ஈடாக தமிழும் இணையற்றதாக உள்ளது.

கருத்துகள் இல்லை: