வெள்ளி, 9 ஏப்ரல், 2010

ஒளியோடு ஒரு அதீத காதல்

ஜென் தத்துவத்தில் மனிதர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். முதலாம் வகையினர் இருளிலே வாழ்ந்து கொண்டிருப்பதை உணராதவர்கள்; இரண்டாம் வகையினர் இருளில் வாழ்ந்து கொண்டு ஒளியை நோக்கி ஏக்கம் கொள்பவர்கள்; மூன்றாம் வகையினரோ ஒளியை நோக்கிப் பயணிப்பவர்கள். அந்த மூன்றாம் பிரிவைச் சார்ந்த மனிதனாக எண்ணியே என் பயணம் இதுவரை தொடர்ந்து வருகிறது.

ஒளியைப் பற்றியச் சுவையும் தேடுதலும் என்னுள்ளே உருவாகக் காரணமாயிருந்தது சினிமா எனும் ஒளி ஊடகம்தான். எப்படி இந்த வெள்ளைத் திரையில் நடிகர்கள் வந்து போகிறார்கள் அவர்களோடு ஆறு, விமானம், சூரியன், பறவை, தெய்வம் எல்லாம் வந்து போகிறன்றன?. சினிமா அரங்குக்கு பின்னே அதுவெல்லாம் எப்படி சாத்தியம்?.தோட்டப் புறங்களில் திருவிழாக் காலங்களில் திறந்த வெளியில் சினிமாவை வெள்ளைத் திரையிட்டுக் காட்டுகையில் எனக்கு குழப்பமே ஏற்படும்.

ஏழு வயது சிறுவனாக நான் நெஞ்சிலே தேக்கி வைத்தக் கேள்ளிகளை என் தாத்தாவிடம் கேட்டேன். அவர், ‘அதோ அந்த சக்கரம் மாதிரி சுழலுதே ரீல்லு அதுலேந்து வர வெளிச்சத்துலதாம்பா அவங்களெல்லாம் வந்து போறாங்கன்னு’ தமது அறிவியல் அறிவைப் பொத்தம் பொதுவாக எனக்குள் சொல்லி விதைத்தார்.

அன்றிலிருந்து சினிமா பார்க்க அரங்கத்திற்குச் செல்லும்போதெல்லாம் அந்த இருட்டில் ஊடுருவிச் செல்லும் ஒளிக்கீற்றை இமைக் கொட்டாமல் யார்யார் அதனுள்ளே ஒளியாகச் செல்கிறார்கள் என்று துருவித் துருவி தேடிப்பார்ப்பதே என் வேலையாகிவிட்டது. எத்தனையோ முறை என் தாத்தா, ‘அத ஏம்பா பாக்குறே திரையைப் பாருன்னு’ சொல்லிக் கொண்டே இருப்பார்.

தாத்தாவின் வார்த்தைகள் ஒளியைப் பற்றிய அதீத ருசியை என்னுள்ளே ஏற்படுத்தியிருந்தது. அந்த பூபாளப் பொழுதுகளில் என் கண்கள் ஒளியைத் தெய்வீகமாய் ரசிக்கத் தொடங்கிவிட்டன. காலைச் சூரியனின் ஒளியைக் ஒரு காதலியைபோல் தினமும் தரிசிக்கக் காத்திருப்பேன்.

அந்த ஒளியில் எந்த தெய்வமாவது வந்திரங்குகின்றதா என்று ஆராய்வேன். தமிழ்த் திரைகளிலே தெய்வங்களெல்லாம் திடீரென ஒளியிலிருந்து வடிவெடுக்குமே அந்த மாதிரி ஏதேனும் என் முன்னே நடக்குமென நம்பிக்கைக் கொண்ட சிறுவனாய் காத்திருந்தேன் ஒரு பெருந்தவத்தோடு.

தென்னங்கீற்றினூடே ஒளி சின்னச்சின்னதாய் கிளைவிட்டு பிரிவதையும் அந்த ஒளிக்கற்றைக் கையில் பிடித்துக் கொண்டே மேலுலகம் செல்வது போன்ற பாவம் அந்தச் சிறுபிராயத்திலே என்னுள்ளே ஏற்படும். இளங்கதிரின் ஒளியைத் தாண்டி உச்சி வெயில் சூரியனையும் கூசும் கண்களால் தேடுவேன். கண்கள் மிகுந்த ஒளியால் பழுது பட்டுவிடுமென என் பாட்டி எப்போதுமே என்னைக் கண்டிப்பது வழக்கம்.

இரவு வேளைகளில் நீலமும் பச்சையும் கலந்து மினுமினுக்கும் நட்சத்திரங்களின் ஒளியை பார்ப்பதின் அலாதி சுகம் இன்றுவரை எனக்குள் விலக்கமுடியாத பழக்கமாகவே வேர்விட்டுள்ளது. பெளர்ணமி நிலவின் மஞ்சள் ஒளிவட்டத்தின் தூரத்தைக் கணக்கிடுவதும் அந்த நிலவுக்குள் யார் தினமும் விளக்கேற்றுகிறார்கள் என்றும் ஆராய்வேன். நம் பாட்டியால் செல்ல முடியாத நிலவுக்கு ஒளவைப்பாட்டி மட்டும் எப்படி நிலவுக்குச் செல்ல முடிந்ததது என்று யோசிப்பேன்.

கார்கால பூமழைத் தூவும் நீளப்பொழுதுகளில் வானவீதியில் நெளிந்தோடும் மின்னலின் ஒளித் தெறிப்பை பயத்தோடும் பரவசத்தோடும் பார்த்து மகிழ்வேன். அப்படி பார்க்கும்போதெல்லாம் ‘கண்ணு போயிருண்டா’ என்று பாட்டி திட்டுவார். கண்களைக் கையால் மூடிக்கொண்டே விரல்களின் சிறுசிறு துவாரங்களின் வழி உருகியோடும் மின்னலின் அழகை ஆராதிப்பேன்.

திருவிழாக் காலங்களில் ஒளிப் பூக்களாய் அலங்கார விளக்குகள் சிரிப்பதை மிக நெருக்கமாய்க் கண்டு ரசிப்பேன். இந்த விளக்குகள் எப்படி ஒளியை உமிழ்கின்றன அது எப்படி இந்தச் சின்னக் குடுவைக்குள் இவ்வளவு ஒளி அடங்கி இருக்கிறது என்று ஆவலோடு தேடுவேன். ஒளியின் மூலத்தைத் தேடுவதில் ஒரு தேவசுகம் உள்ளது.

கார்த்திகைத் திருநாளில் தோட்டத்து எல்லோர் இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றி வைத்திருப்பதை காண்பது பெரும் மகிழ்ச்சித் தரும். அகல் விளக்குகளால் ஒவ்வோர் இல்லமும் தெய்வீகம் பெற்றுவிட்டதாய் எனக்குத் தோன்றும். வானத்து தேவதைகள் ஒளியலங்காரத்தோடு ஊர்வலம் வருவது போன்ற தீராக் காத்திருப்பு எழும். அந்த நாள் முடியும் பொழுது மீண்டும் இன்னொரு கார்த்திகை எப்போது வரும் என்ற ஏக்கம் என்னுள் தொக்கி நிற்கும்.

அகல் விளக்குகள் ஏற்றுவதையும் அதன் ஒளி காற்றில் வளைந்து நெளிந்து ஒளிர்வதையும் காண்பது மிகப் பிடிக்கும். இன்றுவரை என் விரல்களால் அகல் விளக்குகளை ஏற்றியுள்ளதேயன்றி என்றுமே அணைத்ததில்லை; அது தானே அணைவதைக்கூட காண பொறுப்பதில்லை. அந்தளவுக்கு எனக்கும் அகல் ஒளிக்கும் ஒரு ரகசிய நட்புண்டு. வலம்புரிஜான் நூலொன்றில் குறிப்பிட்டதுபோல்’ இருட்டு விலகட்டும் விலகாமல் போகட்டும் விரல்கள் விளக்கேற்றுவதை விட்டுவிடக் கூடாது’ என்ற வாசகம் எனக்காகவே எழுதப்பட்டதோ என்று நட்புப் பாராட்டுவேன்.

புற்றீசல் பொலபொலத்து வரும் மழைக்கால இரவுகளில் மின் விளக்கை அணைத்து தோட்டத்து ஒவ்வொரு வீட்டின் முன்னும் தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தினுள்ளே மண்ணெண்ணை விளக்கு அல்லது மெழுகுத்திரி ஏற்றி வைப்பார்கள். என்னைப்போல் வெளிச்சத்தை விரும்பும் ஈசல்களும் விட்டில் பூச்சிகளும் எதைத்தேடி இங்கே வந்து மாட்டி மடிந்தன என மனம் கணக்கும். இரவின் சுகத்தை தனது மினுமினுப்பால் அழகூட்டும் மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து கண்ணாடிக் குடுவைக்குள் அடைத்து அதன் ஒளியழகை பல பொழுதுகள் ஆராதித்திருக்கிறேன். மரகதம் போல மின்னும் அதன் பச்சை மினுமினுப்பில் தனிக்காதலுண்டு.

ஒளியின் தேவரகசியத்தைத் தேடியலைந்த அந்த இளைய நாள்கள் மிகமிக இனிமையானவை. ஒளியை உள்வாங்கும் கண்கள் மனிதர்களுக்குக் கிடைப்பதற்கரிய வரமாகத் தோன்றும். ஒளியை அருளாகப் பெறும் கண்களை மிகவும் சிலாகித்துப் போற்றுவேன்.

பார்வையற்றவர்களுக்கு நமக்குக் கிடைத்தப் பேறு வாய்க்கவில்லையே என பல காலம் எண்ணி மிக வருந்தியுள்ளேன். இந்த ஒளியின் சுவையை உணரமுடியாமல் தவிக்கும் அவர்களின் இயலாமை என்னுள் என்றும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தும். என் கண்களுக்கு நன்றி சொல்லும் அதே வேளை பார்வையில்லாதவரின் ஒளியற்ற இருளுலகை மனதால் எண்ணி உருகுவேன்.

ஒரு நிலாக் கால இரவில் வீட்டின் முற்றத்தில் பார்வையற்றவர்களைப் பற்றி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது என் தாத்தா சொன்ன வார்த்தைகள் எனக்குள் புதியதொரு வியப்பை ஏற்படுத்தின. இருட்டுக்குள்கூட ஒளியிருக்கும் என்றும் அதேபோல எல்லாப் பொருளுக்குள்ளும் நன்றாய்ப் பார்த்தால் ஒளி தெரியும் என்று சொல்லி எனக்குள் புதியதொரு தேடலை கொளுத்திப் போட்டார்.

இருள் நிலையானது ஒளியோ வந்து போவது என்ற ஓஷோவின் கருத்துகள் இன்று எனக்குப் புரிந்தாலும் அப்போது என்னுள் ஒன்றையொன்று விஞ்சி வருவதே இரவுபகல் என புரிதல் மட்டுமே இருந்தது.

ஒளியைப் போலவே இருளில் புதைந்திருக்கும் அந்த ஒளியழகை தேடும் உந்துதல் எனக்கு ஏற்பட்டது. இருளை கூர்ந்து நோக்க மெல்ல மெல்ல என் கண்களைப் பழக்கினேன். இருண்ட பொழுதுகளில் பயங்கலந்த உணர்வோடு தாத்தா சொன்ன ஒளித் தேடல் தொடங்கியது. அந்தத் தேடுதல் பல்லாண்டுகளுக்குப் பிறகும் என்னுள் தொடர்கிறது ஒரு முடிவற்ற முடிவைத்தேடி.

கருத்துகள் இல்லை: